பெங்களூர் சிறையில் உள்ள தன்னை சந்தித்த போது எடப்பாடி பழனிசாமியுடன் சமரசம் செய்து கொள்வது குறித்த தினகரனுக்கு சில அறிவுரைகளை சசிகலா வழங்கியுள்ளார். 15 நாட்களுக்கு ஒரு முறை பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் சந்தித்து பேசி வருகிறார். கடந்த முறை பெங்களூர் சென்று இருந்த போது சிறையில் உள்ள சசிகலாவை சந்தித்து திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்து பேசியிருந்தார். மேலும் அந்த இரண்டு தொகுதிகளிலும் அ.ம.மு.க வேட்பாளர்களே வெற்றி பெறுவார்கள் என்றும் சசிகலாவிடம் தினகரன் சபதம் செய்திருந்தார்.

இந்த நிலையில் நேற்று பெங்களூர் சிறையில் உள்ள சசிகலாவை தினகரன் நேரில் சென்று சந்தித்தார். அப்போது, அ.ம.மு.க வேட்பாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்களில் பெற்று வரும் வெற்றி குறித்து சசிகலாவிடம் தினகரன் எடுத்துரைத்தார். அதுவும் அமைச்சர்கள் தொகுதிகளில் கூட அ.ம.மு.க வேட்பாளர்கள் கூட்டுறவு சங்க தேர்தல்களில் வெற்றி பெற்றது பற்றியும் சசிகலாவிடம் தினகரன் எடுத்துரைத்துள்ளார். மேலும் தொகுதிகள் தோறும் அ.ம.மு.க உறுப்பினர் சேர்க்கை தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சசிகலாவிடம் தினகரன் தெரிவித்துள்ளார். 

பின்னர் அ.தி.மு.கவில் தற்போது நிலவி வரும் பிரச்சனைகள் குறித்து சசிகலா சீரியசாக தினகரனிடம் பேசியுள்ளார். அதிலும் திருப்பரங்குன்றத்தில் பேசிய ஓ.பி.எஸ்., மீண்டும் அ.தி.மு.கவை சசிகலா குடும்பத்தில் இணைக்கதினகரன் முயற்சிப்பதாக கூறியது குறித்து தினகரன் விவரமாக எடுத்துரைத்துள்ளார். மேலும் அ.தி.மு.கவில் ஒரு தரப்பினர் நம்முடன் சமரசம் செய்து கொள்ளலாம் என்று பேச ஆரம்பித்துள்ளது பற்றியும் சசிகலாவிடம் தினகரன் விரிவாக பேசியுள்ளார்.

இதனை மிகவும் ஆர்வத்துடன் கேட்டுக் கொண்ட சசிகலா, நமக்கு அ.தி.மு.க மிகவும் முக்கியம். எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து சமரசத்திற்கு வந்தால் நிதானமாகவும், அதே சமயம் தன்னிடம் கேட்டும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சசிகலா தினகரனுக்கு அறிவுரை வழங்கியுள்ளார். மேலும் சமரசத்திற்கு அவர்கள் வரும் வரை நமது வழக்கமான அரசியலை தொடரும் படியும் சசிகலா தினகரனுக்கு உத்தரவிட்டுள்ளார்.  இதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தினகரன், 18 எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும் என்றார். இந்த தீர்ப்பிற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி – தினகரன் இடையே சமரசம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.