ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற அரசு பரிசீலனை செய்து வருகிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
டெல்டாவை பாதுகாப்பு வேளாண் மண்டலமாக தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாய சங்கங்கள் சார்பில் பாராட்டு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி காவிரி திருவாரூரில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு விழா இன்று மாலை நடைபெற்றது.


இந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேசுகையில், “விவசாயிகள் யாருக்கும் பயப்பட வேண்டியதில்லை. நாட்டில்  100-க்கு 65 பேர் விவசாயத்தை சார்ந்துதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கண்ணை இமை காப்பது போல பயிரை காப்பாற்றுவது விவசாயிகள்தான். விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் இதுவரை ரூ.7,618 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
விவசாய சங்கங்களின் கோரிக்கையை ஏற்று ரூ.650 கோடி செலவில் தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகிறது. நீடாமங்கலத்தில் நெல் ஜெயராமன் பெயரில் நெல் பாதுகாப்பு மையம் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். ஹைட்ரோகார்பன் திட்டத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்கள் மீதான வழக்குகளை திரும்ப பெற அரசு பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் நல்ல செய்தி வரும்” என்று தெரிவித்தார்.