Asianet News TamilAsianet News Tamil

எடப்பாடி அரசு எங்களை ஏமாற்றுகிறது... டாக்டர் ராமதாஸ் பகிரங்க குற்றச்சாட்டு..!

வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்கும்  எண்ணம் தமிழ்நாடு அரசுக்கு இல்லாததன் வெளிப்பாடுதான், ஆணையம் அமைத்து காலம் தாழ்த்தும் ஏமாற்று முயற்சி என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

Edappadi government is deceiving us ... says Dr. Ramadas ..!
Author
Chennai, First Published Dec 21, 2020, 10:06 PM IST

இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி பாமகவும், வன்னியர் சங்கமும் தொடர் போராட்டங்களை நடத்திவரும் நிலையில், சாதிகள், சமூகங்கள், பழங்குடியினர் குறித்த அளவிடக்கூடிய புள்ளிவிவரங்களைத் திரட்ட ஆணையம் ஒன்றை அமைத்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது வன்னியர் தனி இட ஒதுக்கீட்டை வழங்காமல் தவிப்பதற்கான தந்திரம்; ஏமாற்றும் முயற்சி ஆகும். இதை ஏற்க முடியாது.

Edappadi government is deceiving us ... says Dr. Ramadas ..!
கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு என்ற கோரிக்கை நேற்று முன்நாள் ஏற்பட்ட தேவையைக் கருத்தில் கொண்டு, நேற்று எழுப்பப்பட்டது அல்ல. மாறாக காலம் காலமாக சமுதாயத்தின் அடித்தட்டில் கிடக்கும் வன்னியர் சமுதாய மக்களுக்கு கல்வியும், வேலைவாய்ப்பும் வழங்கி மற்ற சமுதாய மக்களுக்கு இணையான கண்ணியத்துடனும், கவுரவத்துடனும் வாழ வகை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 40 ஆண்டுகளாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறோம். ஆனால், வன்னியர்களுக்கு மட்டும் தனி இடஒதுக்கீடு வழங்காமல் 108 சாதிகளை இணைத்து வழங்கியது; பல முறை இந்த கோரிக்கையை ஏற்காமல் புறக்கணித்தது என்று தமிழகத்தை ஆளும் கட்சியும், இதுவரை ஆண்ட கட்சிகளும் வன்னிய மக்களை தொடர்ந்து ஏமாற்றி வருகின்றன.
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு அண்டை மாநிலங்களான கர்நாடகத்தில் 1962 முதல் 5 தொகுப்புகளாக பிரித்து வழங்கப்படுகிறது; ஆந்திரத்தில் 1970 முதல் 6 தொகுப்புகளாக பிரித்து வழங்கப்படுகிறது; கேரளத்தில் 1966 முதல் 8 தொகுப்புகளாக பிரித்து சாதிவாரியாக இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது; ஈழவர் சாதிக்கு மட்டும் 14% தனி இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. 1989-ஆம் ஆண்டில் வன்னியர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து அப்போதைய முதல்வர் கலைஞர் என்னை அழைத்துப் பேசிய போது பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை 6 பிரிவுகளாக பிரித்து, அவற்றில் 20% கொண்ட ஒரு தொகுப்பை முழுமையாக வன்னியர்களுக்கு வழங்கும்படி வலியுறுத்தினேன். அதை கலைஞர் ஏற்றுக் கொண்டு இருந்தால், கடந்த 32 ஆண்டுகளில் வன்னியர் மட்டுமின்றி அனைத்து சமுதாயத்தினரும் முன்னேறியிருப்பார்கள். ஆனால், கலைஞர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை இரு தொகுப்புகளாக மட்டும் பிரித்து ஏமாற்றினார்.Edappadi government is deceiving us ... says Dr. Ramadas ..!
வன்னியர்களுக்கான 20% தனி இட ஒதுக்கீடு நடப்பு ஆட்சியில் வழங்கப்பட வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கத்தின் கோரிக்கை. ஆனால், சாதி விவரங்களை திரட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள ஆணையம் அதன் அறிக்கையை தாக்கல் செய்ய 6 மாத அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இன்னும் 70 நாட்களில் தேர்தல் அட்டவணை அறிவிக்கப்பட்டு, தேர்தல் நடைமுறைகள் தொடங்கப்பட்டுவிடும். அத்தகைய சூழலில் அறிக்கை அளிக்கவே ஆணையத்திற்கு 180 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருப்பது வன்னியர் சமுதாயத்திற்கு 20% தனி இட ஒதுக்கீடு இந்த ஆட்சியில் இல்லை என்று சொல்லாமல் சொல்லி ஏமாற்றும் முயற்சிதான்.
ஆணையம் அமைப்பது என்பது ஒரு கோரிக்கையின் தீவிரத்தை ஆறப்போட்டு ஒன்றுமில்லாமல் செய்யும் முயற்சிதான் என்பதை கடந்த கால வரலாறுகள் நமக்கு சொல்கின்றன. தேசிய அளவில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு குறித்து பரிந்துரைப்பதற்கான காகா கலேல்கர் ஆணைய அறிக்கையை அப்போதைய பிரதமர் ஜவகர்லால் நேரு குப்பைத் தொட்டியில் வீசி எறிந்தார். மண்டல் ஆணைய அறிக்கயை இந்திரா காந்தி கிடப்பில் போட்டார்; ராஜிவ் காந்தியோ அது புழுக்கள் நெளியும் குடுவை... அதை நான் தொட மாட்டேன் என்று கூறினார். கடுமையான போராட்டங்களின் பயனாகத்தான் பின்னர் வி.பி. சிங் ஆட்சிக்காலத்தில் மண்டல் அறிக்கை செயல்படுத்தப்பட்டது.Edappadi government is deceiving us ... says Dr. Ramadas ..!
தமிழ்நாட்டிலும் இத்தகைய ஆணைய அறிக்கைகளுக்கு மதிப்பளிக்கப்பட்டதில்லை. சட்டநாதன் ஆணையம் மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என பரிந்துரைத்த நிலையில், அதை கலைஞர் அரசு செயல்படுத்தவில்லை. மாறாக, ஆணையம் பரிந்துரை செய்யாமலேயே 15 உயர்சாதிகளை பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் கலைஞர் சேர்த்தார். அதேபோல், பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டை அதிகமாக அனுபவிக்கும் 34 சாதிகளை அந்த வகுப்பிலிருந்து நீக்க வேண்டும் என்ற அம்பா சங்கர் ஆணையத்தின் பரிந்துரையை செயல்படுத்தாத எம்.ஜி.ஆர் அரசு, 29 உயர்சாதிகளை பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கையை மட்டும் ஏற்றுக் கொண்டது. இவ்வாறாக தமிழகத்தில் அமைக்கப்பட்ட எந்த பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் பரிந்துரைகளும் மதிக்கப்படவில்லை.
ஒரு சமுதாயத்தின் கோரிக்கைகளை கடலில் தூக்கி எறிய வேண்டும் என்றால் அதற்கு ஒரு கமிஷனைப் போடு என்பதுதாம் தமிழகத்தில் எழுதப்படாத விதியாகி விட்டது. இவையெல்லாம் காலம் கடத்தும், ஏமாற்றும் தந்திரங்கள் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். எங்களுக்கு இத்தகைய ஆணையத்தை அமைப்பதில் துளியும் நம்பிக்கை இல்லை; இது தேவையும் இல்லை. எங்களுக்குத் தேவை வன்னிய சமுதாயத்திற்கு 20% தனி இட ஒதுக்கீடு தான். அதை தமிழக அரசு உடனடியாக வழங்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் ஆகிய தென் மாநிலங்கள் உள்ளிட்ட எந்த மாநிலத்திலும், மத்தியிலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தியோ, சாதிவாரி விவரங்களை சேகரித்தோ இட ஒதுக்கீடு வழங்கப்படவில்லை. அனைத்து இட ஒதுக்கீடுகளும் ஏற்கனவே இருந்த புள்ளிவிவரங்களில் அடிப்படையில் வழங்கப்பட்டவைதான். தமிழ்நாட்டில் கடந்த 2008-09 ஆம் ஆண்டுகளில் இஸ்லாமியர், அருந்ததியருக்கான உள் ஒதுக்கீடுகளும் அந்த அடிப்படையில் வழங்கப்ப்பட்டவைதான். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு சமூகத்திற்குமான மக்கள்தொகை விவரங்கள் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் உள்ளன. அரசு நினைத்தால் அவற்றின் அடிப்படையில் இந்த நிமிடமே வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க முடியும். ஆனால், அத்தகைய எண்ணம் தமிழ்நாடு அரசுக்கு இல்லாததன் வெளிப்பாடுதான், ஆணையம் அமைத்து காலம் தாழ்த்தும் ஏமாற்று முயற்சி.Edappadi government is deceiving us ... says Dr. Ramadas ..!
ஒருவேளை சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்திதான் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழக அரசு நினைத்திருந்தால், இதை எப்போதோ செய்து இருக்கலாம். 2019 மக்களவைத் தேர்தலுக்காக அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பா.ம.க. சார்பில் மொத்தம் 10 கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அவற்றில் முதன்மையானது சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதாகும். அதன்படி அப்போதே சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருந்தால், எப்போதோ வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியிருக்கலாம்.
அதையெல்லாம் செய்யாமல் இப்போது வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கையை தட்டிக் கழிப்பதற்காக சாதிவாரி விவரங்கள் சேகரிப்பு என்ற கருவி பயன்படுத்தப்படுவதை ஏற்கமுடியாது. தமிழ்நாட்டில் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் வன்னியர்களுக்கு 20% தனி இட ஒதுக்கீடு உடனடியாக வழங்கப்பட வேண்டும் என்பதுதான் பாட்டாளி மக்கள் கட்சியின் கோரிக்கை ஆகும். அக்கோரிக்கை மிகவும் நியாயமானது; உடனடியாக செயல்படுத்த சாத்தியமானது. எனவே, இல்லாத காரணங்களைக் கூறி தட்டிக்கழிக்காமல், பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திடம் உள்ள புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வன்னியர்களுக்கு 20% இட ஒதுக்கீடு வழங்குவதற்கான அரசாணையை உடனே பிறப்பிக்க வேண்டும்.” என்று அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios