ஜெயா டிவி தினகரன் தொலைக்காட்சி என்றும் அதை யாரும் கைப்பற்ற முடியாது என்றும் நாஞ்சில் சம்பத் கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் அணிகள் இணைப்புக்குப் பிறகு, தமிழக அரசியல் பெரும் பரபரப்புக்கு உள்ளாகி உள்ளது. டிடிவி தினகரன் ஆதரவாளர்கள், எடப்பாடிக்கு அளித்து வந்த ஆதரவை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். பின்னர் அவர்கள், அனைவரும் புதுச்சேரியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். 

அணிகள் இணைப்பின்போது, பொது செயலாளர் பதவியில் இருந்து சசிகலா விரைவில் நீக்கப்படுவார் என்று அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக விரைவில் பொதுக்குழு கூட்டுவதாகவும் அப்போது கூறப்பட்டது.

இந்த நிலையில், கட்சி தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. 

இந்த கூட்டத்தின்போது, 4 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. சசிகலா மற்றும் தினகரனை அதிமுகவில் இருந்து நீக்குவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும், ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் இரண்டையும் மீட்டெடுக்கப்படும் என்றும் அப்போது தெரிவிக்கப்பட்டது.

ஏற்கனவே போயஸ்கார்டன் இல்லத்தை நினைவு இல்லமாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எடப்பாடியின் அறிவிப்பில் சசிகலா கோஷ்டி திணறியிருந்தது. 

இந்த நிலையில் நாஞ்சில் சம்பத் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: 

டி.டி.வி தினகரன் நியமனங்கள் செல்லும் என்றும்,  தினகரன் அறிவித்த நிர்வாகிகளுக்குத்தான் அதிகாரம் உள்ளது. ஜெயா டிவி தனியார் தொலைக்காட்சி. அதை யாரும் கைப்பற்ற முடியாது என்ற அறிவு கூட இல்லையா? அதைக் கைப்பற்ற யாருக்கு அந்த அதிகாரம் கொடுத்தது? அதிமுக ஊடகங்களை கைப்பற்ற முடியாது. 

எனவே, 420 என மீண்டும் நிரூபித்துள்ளனர் எடப்பாடி ஆதவாளர்கள். விபரீத விளைவின் உச்சியில் உள்ளார் எடப்பாடி பழனிசாமி என சகட்டுமேனிக்கு முதலமைச்சர் மற்றும் அவரது ஆதரவாளர்களை நாஞ்சில் சம்பத் போட்டுத் தாக்கியுள்ளார். நாஞ்சில் சம்பத்தின் இந்த அதிரடி பேச்சு, எடப்பாடி ஆதரவாளர்களை கொதிப்படையச் செய்துள்ளது.