பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 62-வது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவிடத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், திமுக எம்.பி.கனிமொழி, ஆகியோர் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். 

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தீண்டாமைக்கு எதிராக போராடியவர் இமானுவேல். அவரது 62-வது நினைவு தினத்தில் எனது அஞ்சலியை செலுத்தியுள்ளேன். அகில இந்திய ராணுவத்திலே பணியாற்றிய அவர் 1950-ஆம் ஆண்டு விடுதலை இயக்கத்தை கண்டு 1954-ல் தீண்டாமை மாநாட்டை நடத்தி  போராட்டம் நடத்தியவர் என புகழாரம் சூட்டினார். 

கொள்ளிடத்தில் 20 ஆயிரம் கனஅடி நீர் வீணாக கடலில் கலப்பது கவலையளிக்கிறது. தண்ணீரை சேமிக்காமல் வீணாக்கும் பொதுப்பணித்துறை இப்போது புதுப்பணித் துறையாக மாறியுள்ளது. குடிமராமத்துப் பணிகள் என்று கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கி, ஆங்காங்கே அ.தி.மு.க.வினர் 'கமிஷன்' அடிக்கும் பணியாக நடைபெற்று வருகிறது. 

ஜெயலலிதா அறிவித்த கொள்ளிடத்தில் தடுப்பணை கட்டும் திட்டத்தையாவது இபிஎஸ் விரைவில் நிறைவேற்ற வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். மேலும் இந்திய பொருளாதாரத்தின் 5% வீழ்ச்சி தான் மோடி ஆட்சியின் 100 நாள் சாதனை எனவும் விமர்சனம் செய்தார். உள்ளூரில் உள்ள நீரைச் சேமிக்க முடியாமல் கடலில் கலக்க அனுமதித்து விட்டு, 'உலக சுற்றுலாவின் ஒரு பகுதியாக "இஸ்ரேல் போகிறேன்" என்பது வேடிக்கை மிகுந்த வினோதமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.