Edapadi palanisamy was was broken Sasikala family in two team

தினகரன் என்ற ஒரு நபரை வைத்து கட்சியையும், ஆட்சியையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திட்டமிட்ட சசிகலா, சிறைசெல்லும் தருவாயில் அவரை கட்சியின் துணை பொது செயலாளராகவும் அறிவித்து விட்டு சென்றார்.

ஆனால், சசிகலா குடும்பத்தை சேர்ந்த மற்றவர்களுக்கு தினகரனின் வருகை பிடிக்கவில்லை. குறிப்பாக திவாகரன், அவர் தங்களது ஆதிக்கத்தை ஒழித்து விடுவார் என்றே நினைத்தனர். அவர் நினைத்தது போலவே, தினகரன், மன்னார்குடி உறவுகளின் அனைத்து அதிகாரங்களையும் பறித்து, தன்னை நிலைநிறுத்த முயற்சிகளை மேற்கொண்டார்.

ஆனால், அவரது போறாத காலம், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து, இரட்டை இலை சின்னத்திற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் திகார் சிறை என்று மேலும், மேலும் சிக்கலுக்கு ஆளாக நேர்ந்தது. இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்தி கொண்ட எடப்பாடி, தினகரனை அரசியலில் இருந்து முற்றிலும் ஓரம் கட்ட ஆரம்பித்தார். இதற்கு அவரது குடும்பத்தை சேர்ந்த திவாகரன் உதவியாக இருந்தார்.

இதனால் கொதித்து போன தினகரன், 30 க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ க்களை தமக்கு ஆதரவாக சேர்த்து கொண்டு எடப்பாடிக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார். தற்போது அந்த எண்ணிக்கை 36 ஆக உயர்ந்து விட்டது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட தினகரனை நுழைய முடியாமல் செய்தார் எடப்பாடி. அவர் மன்னார்குடியில் நடத்த இருந்த பொதுக்கூட்டத்தையும் தடுத்து நிறுத்தினார்.

இருந்தாலும், தினகரன் - எடப்பாடி இடையிலான நிழல் யுத்தம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில், தினகரனை எப்படியாவது ஓரம் கட்டியே தீரவேண்டும் என்று முடிவெடுத்த எடப்பாடி, சசிகலா குடும்பத்தையே இரண்டாக உடைக்கும் வேலையில் இறங்கினார். அதற்காக, தினகரன் மீது ஏற்கனவே கடும் அதிருப்தியில் இருக்கும் திவாகரனை தமக்கு சாதகமாக பயன்படுத்த ஆரம்பித்து விட்டார். திவாகரனும், தமது அதிகாரத்தை நிலைநாட்ட வேண்டும் என்று வேட்கையில் களமிறங்க ஆரம்பித்து விட்டார்.

அதன் முதல் கட்டமாக, ஏற்கனவே தினகரன் தரப்புக்கு அனுமதி மறுக்கப்பட்ட மன்னார்குடியில், திவாகரன் சார்பில் வரும் 15 ம் தேதி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம், எடப்பாடி ஆதரவுடன் நடக்க உள்ளது. இந்த விழாவை பிரம்மாண்டமாக நடத்தி தினகரனுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்த எடப்பாடி, அதில் 30 எம்.எல்.ஏ க்கள் மற்றும் 6 அமைச்சர்களை பங்கேற்க வைக்க முடிவு செய்துள்ளார். இது தினகரன் தரப்புக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது. 

சசிகலா குடும்பத்தை இரண்டாக உடைப்பதன் மூலமே, மன்னார்குடியின் அரசியல் ஆதிக்கத்தை முடிவுக்கு கொண்டு வர முடியும் என்று கொங்கு லாபி வகுத்த வியூகம், இதன்மூலம் அரங்கேற்றப்பட்டுள்ளது என்கின்றனர் மூத்த அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.