தினகரன் உள்ளிட்ட மன்னார்குடி வகையறாவினர், தங்கள் கட்சியை அண்ட விடாமல் தள்ளி வைத்திருக்கும் அ.தி.மு.க.வினர், அதற்கு சொல்லும் காரணம் ’ அம்மாவால் கட்சியை விட்டு நீக்கப்பட்டவர். அம்மாவுக்கு இவரை கண்டாலே ஆகாது. அம்மா மருத்துவமனையில் சேர்ந்ததும், அவருக்கே தெரியாமல் வந்து கட்சிக்குள் ஒட்டிக் கொண்டார். அம்மா இறப்புக்கு பின் தன்னை கேட்க யாருமில்லாத நினைப்பில் கட்சியை கையிலெடுக்க நினைத்தார்.’ என்பதே. 

ஆனால் தினகரன் செய்ததாக இவர்கள் குறிப்பிடும் அதே குற்றத்தைத்தான் இப்போது எடப்பாடி பழனிசாமி செய்திருக்கிறார்! சொல்லப்போனால் தினகரனை விட மிக மிக மோசமான செயலை அம்மாவின்  உத்தரவை மீறி எடப்பாடி செய்திருக்கிறார் என்று திருப்பி அடிக்கின்றனர் அ.ம.மு.க.வினர். 

அப்படி என்ன செய்துவிட்டார் எடப்பாடியார்?....

சமீபத்தில் பாடியநல்லூர் பார்த்திபன் என்பவர் எடப்பாடியாரை சந்தித்து, தன்னை அ.தி.மு.க.வில் இணைத்துக் கொண்டுள்ளார். இவரை  புன்னகையுடன் எடப்பாடியார் வரவேற்று, பூங்கொத்து வாங்கி, கட்சியில் இணைத்ததுதான் பஞ்சாயத்து ஆகியிருக்கிறது. இதைத்தான் ஜெயலலிதாவின் உத்தரவை மீறிய செயல்! என்கிறார்கள் அ.ம.மு.க.வினர். 

காரணத்தை விளக்கும் அவர்கள்....
“இந்த பார்த்திபன் சாதாரண நபரில்லை.  ஆந்திரா மற்றும் தமிழக போலீஸின் மோஸ்ட் வாண்டட் குற்றவாளிகள் லிஸ்ட்டில் இருந்த நபர். செம்மரம் கடத்தி விற்று கோடீஸ்வரனானவர். அதுமட்டுமில்லை, சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது திருப்பதி கோயில் பாதையில் குண்டு வைத்து அவரை கொல்ல முயன்ற வழக்கிலும் இவர் குற்றம்சாட்டப்பட்டு இருந்தார். 

இரு மாநில போலீஸாரின் பார்வையிலும் பெரும் கிரிமினல் இவர். இந்த பார்த்திபனை அம்மா அவர்கள் எம்.ஜி.ஆர்.  பேரவை பொறுப்பிலிருந்தும், அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கியிருந்தார். 

ஆனால் அவரை இப்போது எடப்பாடியார் சேர்த்திருக்கிறார். இது அம்மாவுக்கு செய்த துரோகம், அம்மாவின் கட்டளையை மீறிய செயல். ஒரு கிரிமினலை கட்சியை விட்டு நீக்கி, கட்சியின் கண்ணியத்தை அம்மா காத்தார். ஆனால் அதே நபரை இன்று, தன்னை கேட்க அம்மா இல்லை எனும் தைரியத்தில் எடப்பாடி இணைத்துக் கொண்டிருக்கிறார். 
தினகரன் செய்ததை விட மிக மிக மோசமான தவறு இது.” என்கின்றனர். 
கவனிங்க இ.பி.எஸ். சார்.