தற்போது முதலமைச்சராக உள்ள எடப்பாடி பழனிசாமி துவக்கத்தில் அவரது கிராமத்தில் ஊராட்சி மன்ற தலைவராக இருந்தவர். பிறகு தான் படிப்படியாக முன்னேறி தற்போது முதலமைச்சர் சிம்மாசனத்தில் அமர்ந்துள்ளார். எடப்பாடியாருக்கு விஸ்வநாதன் என்கிற தம்பி உண்டு. அதாவது எடப்பாடியாரின் பெரியப்பா மகன் தான் இந்த விஸ்வநாதன். இவரை அடிக்கடி சேலத்தில் உள்ள எடப்பாடியார் வீட்டில் பார்க்கலாம்.

அவ்வப்போது எடப்பாடியார் செல்லும் கோவில் திருவிழாக்களிலும் விஸ்வநாதனை காண முடியும். இதனைத் தாண்டி விஸ்வநாதனை கட்சி மற்றும் ஆட்சி தொடர்பான விஷயங்களில் எடப்பாடியார் அனுமதிப்பதில்லை. சென்னை கோட்டை பக்கமோ, தனது வீட்டு பக்கமோ கூட விஸ்வநாதன் குடும்ப விஷயத்தை தவிர வேறு விஷயங்களுக்கு வரக்கூடாது என்று கெடுபிடி காட்டுவதாகவும் சொல்லப்படுகிறது.

அதே சமயம் சொந்த ஊரில் கட்சி விவகாரங்களை விஸ்வநாதன் கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது. இதில் எடப்பாடியாருக்கு உடன்பாடு இல்லை என்றாலும் பொருத்துக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட விஸ்வநாதன் ஆசைப்பட்டதாகவும் ஆனால் அதற்கு மேலிடத்தில் இருந்து தடை போடப்பட்டதாகவும் சொல்கிறார்கள். எனக்கு ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட கூட உரிமை இல்லையா என்கிற ஆதங்கத்தில் தான் விஸ்வநாதன் திமுக பக்கம் சென்றுள்ளதாகவும் திமுக சார்பில் அவருக்கு உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட உள்ளதாம்.