Edapadi palanisamy beat panneerselvam at Social media
அச்சு மற்றும் காட்சி ஊடகங்களை விட , பேஸ்புக், வாட்ஸ் அப், டுவிட்டர் போன்ற சமூக ஊடகங்களின் தாக்கமே அதிகம் என்பதால், ஒவ்வொரு அரசியல் கட்சியும், தங்கள் தகவல் தொழில்நுட்ப பிரிவை வலுவாக மாற்றி கொண்டு வருகின்றன.
அதிமுகவில் இருந்து பன்னீர் தனியாக அணி பிரிந்த போது, அவருக்கு பக்க பலமாக இருந்து, அவ்வப்போது முகநூல், வாட்ஸ் அப் ஆகியவற்றில் தகவல்களையும் மீம்ஸ்களையும் பரப்பி, அவரை முழுமையாக தொண்டர்களிடமும், மக்களிடமும் கொண்டு சேர்த்த பெருமை அதன் தகவல் தொழில் நுட்ப பிரிவையே சாரும்.
ஆனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு, தகவல் தொழில் நுட்ப பிரிவை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் பலரும், எடப்பாடி அணியில் ஐக்கியம் ஆகி விட்டனர்.

அதனால், பன்னீர் ஆதரவு தகவல் தொழில் நுட்ப பிரிவின் பணிவுகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்போது செயல்படுபவர்களும், பன்னீரின் நிகழ்ச்சிகள் மற்றும் ஒரு சில தகவல்களை பகிர்வதுடன் நின்றுவிடுகின்றனர்.
ஆனால், எடப்பாடி அணிக்கு சென்ற பன்னீர் அணியின் முக்கிய நிர்வாகிகள், தங்கள் வேலையை முன்னைவிட இன்னும் அதிகப்படுத்தி உள்ளனர்.
அதனால், எடப்பாடியின் ஒவ்வொரு அசைவும், அடுத்த நொடியே சமூக ஊடகங்களில் வெகு வேகமாக உலா வந்து கொண்டிருக்கிறது. அரசின் திட்டங்கள், அறிவிப்புகள், அமைச்சர்களின் நிகழ்ச்சிகள், அறிக்கைகள் என அனைத்தும் உடனுக்குடன் பரப்பப்பட்டு வருகின்றன.
அதேபோல், தினகரனின் ஆதரவாளர்களும் தங்கள் தொழில் நுட்ப பிரிவை வலுவாக்கி உடனுக்குடன் சமூக ஊடகங்களில் தங்கள் செயல்பாட்டை விரைவு படுத்தி உள்ளனர்.
குறிப்பாக பன்னீருக்கு எதிரான தகவல்கள் மற்றும் மீம்ஸ்கள் அதிக அளவில் சமூக ஊடகங்களில் பரவ, எடப்பாடி மற்றும் தினகரன் ஆதரவு தகவல் தொழில் நுட்ப பிரிவினர் முக்கிய பங்காற்றி வருகின்றனர்.

இந்நிலையில்,அதிமுகவில் மக்கள் செல்வாக்கு பெற்ற தலைவராக வலம் வந்து கொண்டிருக்கும் பன்னீர், அதை இன்னும் சரி செய்யாமல் இருப்பது ஏன் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சசிகலா தரப்பில், எம்.எல்.ஏ ஏக்கள் கூவத்தூரில் தங்க வைக்கப்பட்டபோது, எம்.எல்.ஏ க்களின் செல்பேசி எங்களை வெளியிட்டு, அவர்களுடன் மக்களை பேச வைத்ததில், பன்னீரின் தொழில் நுட்ப பிரிவுக்கு முக்கிய பங்கு உண்டு.
எனவே, தகவல் தொழில் நுட்ப பிரிவின் வலிமையை நன்கு அறிந்தும், பன்னீர் அணி, இப்படி அலட்சியம் காட்டுவது எதனால்? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
