வடகிழக்கு பருவமழைக்கு முன்பே தூர்வாரி இருக்க வேண்டும் என்றும் திமுக அரசு அதில் கவனம் செலுத்தவில்லை என்றும் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை முதல் கனமழை பெய்து வருகிறது. ஒரே நாளில் பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்தது. இன்றும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதனால் பல பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட்டு உள்ளது. மக்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மணலி, திரு.வி.க.நகர், கோடம்பாக்கம், தேனாம்பேட்டை ஆகிய மண்டலங்களில் பெரும்பாலான இடங்களில் மழைநீர் தேங்கி உள்ளது. மேலும், முதல்வர் ஸ்டாலினின் தொகுதியான கொரட்டூர், கொளத்தூர் ஜி.கே.எம். காலனி, பூம்புகார் நகர், பெரவலூர், புளியந்தோப்பு, மேற்கு மாம்பலம் ஆகிய முக்கிய பகுதிகளில் தேங்கிய மழைநீரை இன்னும் வெளியேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மாநகராட்சி ஊழியர்கள் அடைப்புகளை சரிசெய்து தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இருந்தாலும் தொடர்ந்து பெய்து வரும் மழையால் மீட்புப்பணியில் பாதிப்பு ஏற்பட்டுஉள்ளது. 3வது நாளாக தண்ணீர் தேங்கி நிற்பதால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். ஒருசில இடங்களில் பாதுகாப்பு கருதி மின்சாரமும் துண்டிக்கப்பட்டு உள்ளது. மேற்கு மாம்பலம் பகுதியில் பெரும்பாலான பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. தி.நகர். மேட்லி சுரங்கப்பாதையும், ரங்கராஜபுரம் சுரங்கபாதையிலும் தண்ணீரை வெளியேற்ற முடியாத நிலை உள்ளது. அங்குள்ள கால்வாய்கள் நிரம்பிவிட்டன. ஆனாலும் தொடர்ந்து மழை பெய்து வருவதால் தண்ணீரை வெளியேற்றுவதில் சிரமம் உள்ளது.

இதற்கிடையே சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட கோடம்பாக்கம், ரங்கராஜபுரம் பகுதியில் நேற்று ஆய்வு செய்த எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, இன்று வடசென்னை பகுதிக்கு உட்பட்ட யானைக்கவுனி, எழில் நகர், ஆர்.கே.நகர் வழியாக செல்லும் முல்லை நகர், பாபா நகர்,வில்லிவாக்கம் ஆகிய பகுதிகளில் மழை பாதிப்பு குறித்து 2வது நாளாக பார்வையிட்டார். அப்போது அந்த பகுதி மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், கனமழையால் சென்னை மாநகரே வெள்ளகாடாகி உள்ளதாகவும் நீர் வடியாத காரணத்தால் அத்தியாவசிய தேவையின்று பொதுமக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவித்தார்.

பாதிகப்பட்ட பகுதியில் உடனடியாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், அதிமுக ஆட்சியில் பக்கிங்ஹாம் கல்வாய் முடியும் எண்ணூர் பகுதியில் இருந்த அடைப்பை நவீன இயந்திரம் மூலம் அகற்றினோம். இதனால் முந்தைய காலத்தில் வெள்ள நீரால் மூழ்கிய வடசென்னை பகுதி பெரும்பாலான பகுதிகள் வெள்ள நீர் தேங்காமல் தவிர்க்கப்பட்டுள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். வடகிழக்கு பருவமழைக்கு முன்னே தூர்வாரி இருக்க வேண்டும். ஆனால் திமுக அரசு அதில் கவனம் செலுத்தவில்லை என்று குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, தற்போது மூத்த ஐஎஏஸ் அதிகாரிகள் நியமனம் காலம் தாழ்ந்த நடிவடிக்கை. முன்னெச்சரிக்கையாக இருந்திருந்தால் இன்றைய பாதிப்பு தவிர்க்கப்பட்டிருக்கும் என்றும் தெரிவித்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கமிஷன் வாங்கியதாக வேண்டுமென்றே அவதூறு பரப்புவதாக தெரிவித்த அவர், மக்களின் குறைகளைத்தான் தெரிவிக்கிறோம். இதில், அரசியல் செய்ய வேண்டிய நோக்கம் இல்லை என்றும் தெரிவித்தார்.
