"இந்தியா முழுவதும் பிரசித்திபெற்ற சாலையின் பெயர் மாற்றப்படுவதை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள். விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என மாற்றினாலும் மாற்றிவிடுவார்கள்” என்று கிண்டலடித்திருந்தார் ஜெயக்குமார்.

கல்லும், மண்ணுமாக கிடந்த சாலையை செப்பனிட்டு, அதற்கு கிழக்கு கடற்கரை சாலை என்று பெயரிட்டவரும் கருணாநிதிதான் என்று தமிழக நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்துள்ளார்.

தமிழக நெடுஞ்சாலை துறையில் பவள விழாவையொட்டி நடந்த நிக்ழ்ச்சியில் பேசிய தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “ நெடுஞ்சாலைத் துறைக்கு பெருமை சேர்த்தவர் தலைவர். அதனால், கிழக்கு கடற்கரை சாலைக்கு முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என்ற பெயரை சூட்டுகிறேன்” என்று தெரிவித்தார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், “சென்னை கிழக்கு கடற்கரை சாலைக்கு முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரை சூட்டுவதை கொச்சைப்படுத்த விரும்பவில்லை. என்றாலும் காஷ்மீரில் இருப்பவர்களுக்கு கூட ஈசிஆர் என்றால் தெரியும். இந்தியா முழுவதும் பிரசித்திபெற்ற சாலையின் பெயர் மாற்றப்படுவதை பொதுமக்கள் விரும்ப மாட்டார்கள். விரைவில் தமிழ்நாட்டை கருணாநிதி நாடு என மாற்றினாலும் மாற்றிவிடுவார்கள்” என்று கிண்டலடித்திருந்தார்.

இந்நிலையில் ஜெயக்குமாருக்கு தமிழக பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ. வேலு பதிலளித்துள்ளார். திருச்சியில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, ஜெயக்குமார் கருத்து தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த எ.வ.வேலு, “நெடுஞ்சாலை என்ற தனித் துறையை உருவாக்கியவர் கருணாநிதிதான். கல்லும், மண்ணுமாக கிடந்த சாலையை செப்பனிட்டு, அதற்கு கிழக்கு கடற்கரை சாலை என்று பெயரிட்டவரும் கருணாநிதிதான். அதனால்தான் அந்தச் சாலைக்கு முத்தமிழ் அறிஞர் கலைஞர் கருணாநிதி சாலை என்று பெயரிட்டிருக்கிறோம். இந்தப் பெயரால் தமிழக மக்களுக்கு எந்தக் குழப்பமும் வராது. ஜெயக்குமாருக்கு மட்டும்தான் குழப்பம் வரும்.” என்று தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில், “தமிழகத்தின் மத்தியில் திருச்சி அமைந்துள்ளது. எனவே, இங்கு பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் திருச்சியின் முகம் மாறும். சிறப்பான மாவட்டமாக திருச்சி உருவாகும். புதிதாக சாலை அமைக்கும்போது பழைய சாலைகளை அப்புறப்படுத்திய பிறகுதான் புதிய சாலைகள் உருவாக்கப்படுகின்றன. எங்காவது மில்லிங் செய்யாமல் சாலைகள் போடப்பட்டால் எனக்கு புகாரை அனுப்பலாம். கண்டிப்பாக மில்லிங் செய்துதான் புதிய சாலைகள் அமைக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. சாலைகளில் செடிகள் வைத்தால் ஆடு, மாடுகள் தொந்தரவு இருக்கும். எனவேதான் ஆறு அடிக்கு மேல் உள்ள மரக்கன்றுகளை வாங்கி வைத்து வருகிறோம். உயரமான மரக்கன்றுகள்தான் சாலை ஓரங்களில் நடப்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலை துறை மரங்களை தேவையில்லாமல் வெட்டக் கூடாது என்று மின் துறைக்கு கடிதம் எழுத உள்ளேன்.” என்று எ.வ. வேலு தெரிவித்தார்.