நாட்டின் பொருளாதாரத்திற்கு புத்துயிரூட்ட வேண்டுமெனில், நாட்டில் உள்ள 80 சதவீதம் குடும்பங்களுக்கு நேரடியாக பணம் வழங்க வேண்டும் என்றும் அனைவருக்குமான உணவு ரேஷன் அளித்திட வேண்டும் என்றும், இதற்கு 10 லட்சம் கோடி ரூபாய் புதிய ஊக்குவிப்புத் தொகை தேவை என்றும் பொருளாதார நிபுணரும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பொருளாதார பேராசிரியருமான ஜெயதி கோஷ் கூறியுள்ளார். புதுதில்லியில் ஹெடரோடாக்ஸ் எக்கனாமிஸ்ட்ஸ் கலெக்டிவ் அமைப்பின் சார்பில் இணையவழி பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது, அதில் பங்கேற்ற பேராசிரியர் ஜெயதி கோஷ், தற்போதுள்ள நெருக்கடியில் வேலைவாய்ப்பு உத்தரவாதம் ஊரக மற்றும் நகர்ப்புற தொழிலாளர்களுக்கு உருவாக்கப்பட வேண்டும், ஏனெனில் இப்போது வேலையின்மை நகரங்களிலும் அதிகரித்திருக்கிறது, அரசாங்கம் நிதி நெருக்கடி குறியீடுகளை நிறுத்தி வைத்துவிட்டு இதற்கு தேவையான நிதி ஒதுக்கீட்டை செய்திடவேண்டும். 

நாட்டில் பொருளாதாரம் மோசமாக சென்று கொண்டிருக்கக்கூடிய சமயத்தில், மிகவும் அற்புதமான கடன் விகிதங்களால் எவ்வித பயனும் ஏற்படாது, அரசாங்கம் அறிவித்துள்ள கொள்கைகள் தோல்வியையே ஏற்படுத்திடும், அரசாங்கம் அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ரூபாய் நிதி தொகுப்பில் வெறும் மூன்று லட்சம் கோடி ரூபாய் தான் உண்மையில் ஒதுக்கப்பட்டிருக்கிறது, இந்தத் தொகைகூட ஏற்கனவே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகளுக்காகதான் ஒதுக்கப்பட்டிருக்கிறது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், அதில் மிகவும் பெரிய அளவில் உள்ள தொழிலதிபர்களுக்குதான் பயனளித்திடும். விவசாய விளைபொருட்களுக்கு அரசாங்கம் அறிவித்துள்ள குறைந்தபட்ச ஆதார விலை நாட்டிலுள்ள பணவீக்கத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு அறிவிக்கப்படவில்லை. தொழிலாளர்களின் உண்மை ஊதியங்கள் நசுக்கப்பட்டு கொண்டிருக்கின்றன, 

இப்போது நாட்டில் ஏற்பட்டிருக்கக் கூடிய பொருளாதார நெருக்கடியை தளர்த்த வேண்டுமெனில், தானியங்கள், பருப்பு வகைகள் சமையல் எண்ணெய், உட்பட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் அடுத்த ஆறு மாதங்களுக்கு அனைவருக்குமான பொது விநியோக முறை மூலமாக அளிக்கப்பட வேண்டியது அவசியமாகும். இவ்வாறு ஜெயதி கோஷ் கூறினார். கூட்டத்தில் பங்கேற்ற இதர பொருளாதார நிபுணர்கள் கூறியதாவது:- கடந்த 75 நாட்களாக இருந்துவரும் சமூக ஊரடங்குகளின் காரணமாக இழப்பீடு  அளித்திடும் விதத்தில் நாட்டின் அடிமட்டத்தில் உள்ள 80 சதவிகித குடும்பத்தினருக்கு 15000 ரூபாய் ரொக்கமாக அளிக்கப்பட வேண்டும். அதேபோல் வேலைவாய்ப்பு உத்தரவாதங்கள் நகர்புறங்களுக்கும் விரிவு ஆக்கப்பட வேண்டும், மேலும் கிராமப்புறங்களில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் விவசாயப் பணிகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம், இதன் வேலை நாட்களை 200 நாட்களாக உயர்த்திட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளனர்.