இந்தியாவில் இருந்திருந்தால் எனக்கு நோபல் பரிசு கிடைத்திருக்காது என பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு வென்ற அபிஜித் பானர்ஜி தெரிவித்தார். இந்தியாவில் பிறந்து தற்போது அமெரிக்காவில் வசித்து வருபவர் பொருளாதார நிபுணரான அபிஜித் பானர்ஜி. கடந்த ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டுப்லோ மற்றும் மைக்கேல் கிரெமர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. 

அபிஜித் மற்றும் அவரது மனைவி எஸ்தர் டுப்லோவின் வறுமை ஒழிப்புக்கான சோதனை அணுகுமுறைக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.
 ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடைபெற்ற இலக்கிய திருவிழாவில் அபிஜித் பானர்ஜி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில் கூறியதாவது: நான் சொந்த நாட்டில் இருந்திருந்தால் எனக்கு நோபல் பரிசு கிடைத்து இருக்காது. அதற்காக இந்தியாவில் திறமையாளர்வர்கள் இல்லை என்று அர்த்தம் இல்லை. நோபல் பரிசு வாங்க  வேண்டுமானால் அதற்கு  சில அமைப்புகள் தேவை. தனி ஒருவரால் அந்த சாதனையை படைக்க சாத்தியமில்லை. மற்றவர்கள் எனக்காக செய்த நிறைய வேலைகளால்தான்  எனக்கு பெயர் கிடைத்தது. 

 

இவ்வாறு அவர் தெரிவித்தார். மும்பையில் பிறந்த அபிஜித் பானர்ஜி, யுனிவர்சிட்டி ஆப் கல்கத்தா, ஜவஹா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்தார். மேலும், ஹார்டுவேர்டு பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. பட்டம் பெற்றார். இவர் தற்போது மாசசூசிட்ஸ் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.