கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 7 மாநிலங்களில் ராஜ்ய சபா எம்.பி.க்களைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் ஜூன் 19 அன்று நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத் உள்பட 17 மாநிலங்களில் 55 மாநிலங்களை உறுப்பினர்களின் பதவி ஏப்ரல் 2-ல் முடிவுக்கு வந்தது. இந்தப் பதவிகளுக்கு புதிய உறுப்பினர்களைத் தேர்வு செய்ய மார்ச் 26 அன்று தேர்தலை தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. வேட்புமனுத் தாக்கல் முடிந்த நிலையில், மார்ச் 24 நள்ளிரவு முதல் கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் தவிர்த்து பிறரை தேர்வு செய்வதற்காக மார்ச் 26-ல் அறிவிக்கப்பட்டிருந்த தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

 
இந்தியாவில் 5-ம் கட்டமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில், பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுவருகின்றன. இந்நிலையில் ஆந்திரா, குஜராத், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மணிப்பூர், மேகாலயா ஆகிய 7 மாநிலங்களில் காலியாக உள்ள 18 எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் ஜூன் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடைபெறும். தேர்தல் முடிந்த அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 6 உறுப்பினர்கள் உள்பட கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட 10 மாநிலங்களில் உள்ள 37 எம்.பி பதவிகள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.