தமிழ் நாடு, கேரளா, அஸ்ஸாம், மேற்கு வங்கம், புதுச்சேரி ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் மே மாதத்துக்குள் நடத்தி முடிக்கப்பட வேண்டும். இதற்கான பணிகள் தற்போது தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. கொரோனா தடுப்பு பாதுகாப்பு நெறிமுறைகளை பின்பற்றப்பட வேண்டியிருப்பதால், கூடுதலாக வாக்குச்சாவடிகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டுள்ளது. 

வழக்கமாக பள்ளி பொதுத்தேர்வுகள் மார்ச் மாதத்தில் நடத்தி முடிக்கப்படுவது வழக்கம். ஆனால், கொரோனா பரவல் காரணமாக  நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்படவில்லை. எனவே, பொதுத்தேர்வு மே, ஜூன் மாதத்தில் நடத்தப்படும் என்று பல மாநில அரசுகள் அறிவித்துள்ளன. எனவே, பொதுத்தேர்வுகளுக்கு இடையூறு இல்லாமல், ஐந்து மாநிலங்களிலும் ஏப்ரல் மாதத்தில் சட்டப்பேரவைத் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே தேர்தல் தேதி அறிவிப்பு பிப்ரவரி மாதத்திலேயே வெளியிடப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.