தி.மு.கவின் பொருளாளராக துரைமுருகனை தேர்வு செய்ய ஸ்டாலின் முடிவெடுத்த நிலையிலும் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்ந்து அந்த பதவியை குறி வைத்து காய் நகர்த்தி வருகிறார். தி.மு.கவின் பொருளாளராக இருந்த ஆற்காடு வீராசாமி அந்த பதவியை கடந்த 5 வருடங்களுக்கு முன்னரே ஸ்டாலினுக்கு விட்டுக் கொடுத்துவிட்டு அரசியலில் இருந்தே ஒதுங்கிவிட்டார். அதன் பின்னர் பொருளாளர் பதவியில் இருந்த ஸ்டாலின் கடந்த ஆண்டு தி.மு.க செயல் தலைவர் ஆனார். 

செயல் தலைவர் பதவியுடன் பொருளாளர் பதவியையும் ஸ்டாலின் கூடுதலாக கவனித்து வந்தார். இந்த நிலையில் கலைஞர் மறைவை தொடர்ந்து தி.மு.க தலைவராக ஸ்டாலின் முடிவு செய்து பொதுக்குழுவை கூட்டியுள்ளார். 28ந் தேதி கூட பொதுக்குழுவில் தலைவர் பதவிக்கு மட்டும்அல்ல பொருளாளர் பதவிக்கும் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  

பல ஆயிரம் கோடி ரூபாய் சொத்துகளை நிர்வகிக்கும் தி.மு.க பொருளாளர் பதவிக்கு ஸ்டாலின் குடும்பத்தை சேர்ந்த சிலரே குறி வைத்தனர்.

ஆனால் ஸ்டாலினோ பொருளாளர் பதவிக்கு துரைமுருகன் பெயரை டிக் செய்துவிட்டார். விரைவில் பொருளாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை பெற்று துரைமுருகன் வழங்க உள்ளார். துரைமுருகன் பெயரை மு.க.ஸ்டாலினே முன்மொழிய உள்ளார். 

இந்த நிலையில் முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை மாவட்ட தி.மு.க செயலாளருமான எ.வ வேலுவுக்கும் பொருளாளர் பதவி மீது ஒரு கண் விழுந்துள்ளது. கடந்த ஆறு ஏழு வருடங்களாக ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமான மாவட்டச் செயலாளராக எ.வ.வேலு உள்ளார். அவர் திருவண்ணாமலையில் இருப்பதை விட சென்னையில் ஸ்டாலினுடன் இருக்கும் நேரம் தான் அதிகம். 

மேலும் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு தி.மு.க தேர்தல் நிதி வசூலித்த போது மற்றஅனைத்து மாவட்டச் செயலாளர்களையும் விட அதிகமாக தேர்தல் நிதி வழங்கியது எ.வ.வேலு தான்.

இதனால் எ.வ.வேலுவுக்கு ஸ்டாலின் பரிசளித்து பாராட்டினார். இந்த அளவிற்கு ஸ்டாலினின் அபிமானம் பெற்ற எ.வ.வேலு தி.மு.கவின் தலைமை கழகநிர்வாகியாக வேண்டும் என்று நீண்ட நாட்களாக காய் நகர்த்தி வருகிறார். 

அதிலும் தற்போது பொருளாளர் பதவி காலியாவதால்அந்த பதவிக்கு தன்னை ஸ்டாலின் முன்னிறுத்துவார் என்று எ.வ.வேலு எதிர்பார்த்தார். ஆனால் அவரை விட சீனியரான துரைமுருகனை ஸ்டாலின் தேர்வு செய்துவிட்டார். இருந்தாலும் கூட கடைசி நேரத்தில் கூட தனக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கருதி தொடர்ந்து ஸ்டாலினுக்கு நெருக்கமான குடும்ப உறுப்பினர் ஒருவர் மூலமாக எ.வ.வேலு காய் நகர்த்தி வருகிறார். 

இந்த முறை கிடைக்கவில்லை என்றாலும் கூட தற்போது முதலே முயற்சி செய்தால் தான் அடுத்த முறையாவத தலைமை கழக பதவி கிடைக்கும் என்று கூறி துரைமுருகனுடன் மல்லுகட்ட எ.வ.வேலு தயராகி வருகிறாராம்.