ஆதார் அல்லது குடும்ப அட்டை மற்றும் தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பித்தால் தாமதமின்றி அனுமதி வரும் 17 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

 

தமிழகத்தில் கொரோனா சற்று வேகமாக பரவி வருகிறது. இருப்பினும் அவற்றை இன்னும் சில காலத்திற்குள் கட்டுக்குள் கொண்டு வரலாம் என்று தமிழக அரசு உறுதிபட தெரிவித்து வருகிறது. இருப்பினும் ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்துக்கு செல்ல தொடர்ந்து இ பாஸ் நடைமுறை அமலில் உள்ளது. இ -பாஸ் நடைமுறை அமலில் இருந்தாலும் அதை விண்ணப்பித்து பெறுவதில் பெரும் சிரமம் இருப்பதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில் வரும் 17 ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் தங்குதடையின்றி இ-பாஸ் அனுமதி கிடைக்கும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஆதார் அல்லது ரேஷன் அட்டை நகலுடன் விண்ணப்பித்தால் இ-பாஸ் தாமதமின்றி வழங்கப்படும் என்றும் பொதுமக்கள் நலன் கருதி எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி, தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும், தவிர்க்க இயலாத பயணங்களுக்கு மட்டுமே இ-பாஸ் விண்ணப்பம் செய்து, இ-பாஸ்  பெற்று பயணிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நோய்த்தொற்றை தவிர்க்கவும் திருமணம், அவசர மருத்துவம் நெருங்கிய உறவினர் மரணம், பணி சம்பந்தமாக பயணித்தல் ஆகிய காரணங்களுக்கு வெளியிடங்களுக்கு சென்று சொந்த ஊர் திரும்புதல் ஆகிய காரணங்களுக்காக மட்டும் அனுமதி வழங்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் பொதுமக்கள் முக்கிய பணியிடங்களுக்கு தமிழ்நாடு முழுவதும் பயணிக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஆயினும் தவிர்க்க இயலாத பணிகள், பயணங்களுக்கு மட்டும் இ-பாஸ் விண்ணப்பம் செய்து பயணிக்குமாறு அந்த அறிக்கையில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.