பெரியார் வழியில் தீவிர பகுத்தறிவுவாதியாக விளங்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி. தன்னை எப்போதும் கடவுள் மறுப்பாளராக காட்டிக் கொண்ட அவர், அதனால் பலமுறை சர்ச்சைகளுக்கும் வித்திட்டிருக்கிறார். அவருக்கு அடுத்து திமுக தலைவரான ஸ்டாலின், தந்தையை போல தீவிரமாக பகுத்தறிவு பேசியதில்லை. ஆனால் நாத்திகராக இருந்து வருகிறார்.

இது ஒருபுறம் இருக்க, திமுக தலைமையின் குடும்ப பெண்கள் அனைவரும் மிகுந்த கடவுள் பக்தி உடையவர்கள். தயாளு அம்மாள், ராஜாத்தி அம்மாள், துர்கா ஸ்டாலின், செல்வி ஆகியோர் நெற்றியில் பெரிய போட்டு வைத்து ஆத்திகவாதியாக வலம் வருகிறார்கள். வெளிப்படையாகவே கோவில்களுக்கும் செல்வார்கள். அந்த குடும்பத்தில் கனிமொழி மட்டுமே கருணாநிதியின் வழியில் கடவுள் மறுப்பாளராக இருக்கிறார்.

இதனிடையே தற்போதைய திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலினின் மனைவி துர்கா பலகோவில்களுக்கு செல்வது வழக்கம். சமீபத்தில் காஞ்சிபுரத்தில் அத்திவரதரையும் தரிசித்து வந்தார். இந்த நிலையில் தற்போது திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்துள்ளார். அங்கு நடைபெற்ற சுப்ரபாத சேவையில் கலந்து கொண்டு ஏழுமலையானை பயபக்தியுடன் வழிபட்டார். தொடர்ந்து திருப்பதி தேவஸ்தானம் சார்பாக துர்கா ஸ்டாலினுக்கு ரங்கநாயக மண்டபத்தில் வைத்து ஷேசா வஸ்திறம் அளிப்பட்டது.