மக்களவை தேர்தலுக்கான கூட்டணியை நிறைவு செய்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அடுத்த கட்டமாக வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். 

கூட்டணிக் கட்சிகளுக்கு ஒதுக்கியது போக எஞ்சியுள்ள 20 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. திமுக சார்பில் தூத்துக்குடியில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி, ஸ்ரீபெரும்புதூரில் திமுக முதன்மைச் செயலாளர் டி.ஆர்.பாலு, மத்திய சென்னையில் முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், நீலகிரியில் திமுக கொள்கை பரப்புச் செயலாளர் ஆ.ராசா ஆகியோர் போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதேவேளை பெரும்பாலான தொகுதிகளில் இளைஞர்கள், பெண்களை அறிமுக வேட்பாளராக களமிறக்கவும் திமுக தலைமை முடிவு செய்துள்ளது. 

பல தொகுதிகளில் முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் தங்களது வாரிசுகளுக்கு வாய்ப்பு கேட்டு வருகின்றனர். திமுக பொருளாளர் துரைமுருகனின் மகன் கதிர்ஆனந்த் வேலூர் தொகுதியில் போட்டியிடவும் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு உறுப்பினர்களான க.பொன்முடி தனது மகன் கவுதம சிகாமணிக்கு கள்ளக்குறிச்சியையும், எ.வ.வேலு தனது மகன் கம்பனுக்கு திருவண்ணாமலை தொகுதியையும் கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள துரைமுருகன் இல்லத்திற்கு பொன்முடி தனது மகன் கவுதம சிகாமணியுடன் நேற்று இரவு சென்று சந்தித்தார். அப்போது உற்சாகமாகப்பேசிய திமுக பொருளாளர், பொன்முடியின் கைகளைப் பிடித்தபடி ‘என் மகனும், உன் மகனும் எம்.பியாக போவது உறுதிய்யா’’ என நம்பிக்கையாக கூறியுள்ளார்.