தி.மு.க.வின் பொருளாளர் துரைமுருகனை தேர்தல் அரசியலில் இருந்து விலக்கி வைக்க அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் ரகசிய சிண்டிகேட் போட்டு செயல்பட்டு வருகின்றனர். கருணாநிதியின் நிழலாக, துணை அதிகார மையமாக வலம் வந்தவர், அடுத்த தலைமுறைக்கு இடம் கொடுக்காமல் இருப்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை. 

அதிலும் துரைமுருகனின் வீட்டில் கடந்த நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது ரெய்டு நடத்தப்பட்டு, பணம் பறிமுதல் செய்யப்பட்டு, தேர்தல் நிறுத்தப்பட்ட நிலையில் துரையின் ஆவேச ரியாக்‌ஷன்களால் கட்சியின் பெயர் கஷ்டப்பட்டது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, துரைமுருகனை இனி ஆக்டீவ் அரசியலுக்குள் வரவே விடக்கூடாது! என இந்த சிண்டிகேட்டில் ஒரு மனதாக தீர்மானம் இயற்றப்பட்டது. 

அதன் விளைவாகத்தான் ‘நாடாளுமன்ற தேர்தலில் வென்று தி.மு.க. -காங்கிரஸ் உள்ளிட்ட கூட்டணி ஆட்சி மத்தியில் அமைந்ததும், துரைமுருகனை ஏதோ ஒரு மாநிலத்தின் கவர்னராக நியமிக்கும் முடிவு தலைமையிடம் இருக்கிறது.’ என்று ஒரு தகவலை கசியவிட்டனர். (நம் ஏஸியாநெட் தமிழ் இணையதளத்திலும் இதுபற்றி எழுதியிருந்தோம்.)

இந்த தகவல் துரைமுருகனின் கண்களில் விழ, ‘சுண்டைக்காய் பசங்க, என்னை தேர்தல் அரசியலில் இருந்து அகற்றப் பார்க்கிறார்களா?’ என்று கொதித்தெழுந்தார். விளைவு நான்கு தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரசாரங்களில், தன் சுயபுராணம் பேசி தாண்டவமாட துவங்கியிருக்கிறார் துரை. 

அந்த வகையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் பேசியவர்...”எட்டு ஆண்டு கால அ.தி.மு.க. ஆட்சியில் குடி நீர் கூட மக்களுக்கு ஒழுங்காக தரமுடியவில்லை. நான் காட்பாடி தொகுதியில் பதினோறு முறை தேர்தலில் நின்றுள்ளேன்.  பனிரெண்டாவது முறையும் நான் தான் நிற்பேன், நான் தான் ஜெயிப்பேன். காரணம், காட்பாடி தொகுதிக்கு பாலாறு தண்ணீர் தந்தேன். இப்போது பாலாற்றில் தண்ணீர் இல்லை. இதனால் முந்நூறு கிலோமீட்டரில் உள்ள காவிரியாற்றில் இருந்து தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுத்தேன். குடிதண்ணீர் தரமுடியவில்லை என்றால், மீண்டும் ஓட்டு கேட்க அ.தி.மு.க. அரசு வெட்கப்படணும்.” என்று பொளந்துவிட்டார். 

இந்நிலையில் ”தலைவர் ஸ்டாலின் தான் எந்த தொகுதியில் யாரை வேட்பாளராக்குவது என்று முடிவெடுக்க வேண்டும். கழக பொருளாளரான துரைமுருகன் இப்படி ‘நான் தான் மீண்டும் காட்பாடியின் வேட்பாளர். நிற்பேன், ஜெயிப்பேன்’ என்று பேசுவது என்ன அழகு? அப்படியானால், எனக்கு சீட் தந்தே ஆக வேண்டும்! என்று தளபதியை மிரட்டுகிறாரா துரைமுருகன்?” என்று புது களேபரத்தை கழகத்தினுள் கிளப்பிவிட்டுள்ளனர் அந்த சிண்டிகேட் சீனியர்கள்.