திமுக பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த் மனுவை நிறுத்தி வைக்க எதிர்ப்புத் தெரிவித்த சர்ஜ் ஃபாதர் கோர்பிரே நோபலை திமுகவினர் அடிக்கப்பாய்ந்து அராஜகத்தில் ஈடுபட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 

கடந்த தேர்தலின் போது துரைமுருகன் வீட்டில் கணக்கில் வராத 10 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அவருக்கு நெருங்கியவரின் குடோனில் 10 கோடி ரூபாய் கத்தை கத்தையாக சூட்கேஸ்களிலும், மூட்டைகளிலும் பதுக்கி வைத்திருந்ததும் பறிமுதல் செய்யப்பட்டது. வாக்காளர்களுக்கு திமுக சார்பில் விநியோகிக்க வைத்திருந்த பணம் அது என்பது தெரிய வந்தது. இது தொடர்பாக கதிர் ஆனந்த் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் மீண்டும் வேலூரில் போட்டியிட கதிர் ஆனந்த் வேட்பு மனு தாக்கல் செய்தார். 

பரிசீலனை நாளான இன்று கதிர் ஆனந்த் மீது வழக்கு இருப்பதால் அவரது மனுவை ஏற்றுக்கொள்ளக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்தார் அனைத்திந்திய ஜனநாயக பாதுபாப்பு கழக தலைவரான சுயேட்சை வேட்பாளர் கோர்ஃபிரே நோபல். இதனால் அவரது மனு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

 

தேர்தல் அலுவலர் அறையை விட்டு வெளியே வந்த கோர்ஃபிரே நோபல் செய்தியாளர்களை சந்திக்க ஆயத்தமானார். அப்போது ஆத்திரம் அடைந்த திமுகவினர் கோர்ஃபிரே நோபிலை சூழந்து கொண்டு அவரை பேசவிடாமல் அடிக்கப் பாய்ந்தனர். வேட்பாளரை அநாகரீக வார்த்தைகளால் திட்டினர். அதனை படம் பிடித்த செய்தியாளர்களையும் வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்றனர். பின்னர் காவல்துறையினர் அராஜகத்தில் ஈடுபட்ட திமுகவினரை வெளியேற்றினர்.

 

தேர்தல் அலுவலகத்திற்கு குறிப்பிட்ட நபர்களே உள்ளே செல்ல அனுமதி இருக்கிறது. ஆனால், அந்த வரம்புகளையும் மீறி கும்பலாக தேர்தல் அலுவலர் அறைக்குள் திமுகவினர் புகுந்து சுயேட்சை வேட்பாளரை தாக்க முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.