அதிமுக அரசில் நேற்று வரை இருந்த ஓ.பன்னீர் செல்வம் இன்று குடிநீருக்காக போராட்டம் நடத்துவது கேலிக்குரியது என்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இப்போதுதான் ஞானோதயம் வந்ததா? என்றும் திமுக முதன்மை செயலாளர் துரைமுருகன் கேள்வியெழுப்பியுள்ளார்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டு அணிகளாக பிளவுபட்டன. அதிமுக அம்மா அணியின் பொது செயலாளர் செயலாளர், சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை செல்லப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சராக நியமனம் செய்யப்பட்டார். ஜெயலலிதா இறந்ததை அடுத்து, அவர் போட்டியிட்ட ஆர்.கே. நகர் தொகுதியில் டிடிவி தினகரன் போடடியிடுவதாக இருந்தது. ஆனால், இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றதாக அவர் கைது செய்யப்பட்டார்.

எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் அணியென 3 ஆக அதிமுக இயங்கி வருகிறது. இந்த நிலையில், டிடிவி தினகரன், நேற்று அதிமுக அம்மா அணிக்கு புதிய நிர்வாகிகளை நியமித்தார். 

ஆனால், டிடிவியின் நியமனம் கேலிக்குரியது என்றும், அதிமுகவில் டிடிவி தினகரன் இல்லை என்றும் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் அணிகளால் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் குடிநீர் பிரச்சனை, நீட் தேர்வு குளறுபடி, விவசாயிகள் பிரச்சனைகள் உள்ளிட்டவை குறித்து போராட்டம் நடத்தப்போவதாக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்திருந்தார். இது தொடர்பான கூட்டமும் இன்று அவரது இல்லத்தில் நடைபெற்றது. 

இந்த நிலையில், திமுகவின் முதன்மை செயலாளரான துரைமுருகன், ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த போராட்டம் குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக அரசில் நேற்றுவரை இருந்த ஓ.பன்னீர்செல்வம், குடிநீருக்கு ஆர்ப்பாட்டம் நடத்துவது கேலிக்குரியது என்று கூறியுள்ளார்.

உயிர்வாழ குடிநீர் அவசியமானது. அதைத் தருவது அரசின் கடமை என்று ஓ. பன்னீர்செல்வத்துக்கு இப்போதுதான் ஞானோதயம் வந்ததா? என்றும் துரைமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.