Duraimurugan press meet in Chennai Airport

மம்தா பானர்ஜியின் முயற்சிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து மட்டுமே தெரிவித்தார் என்றும், ஆதரவு தெரிவிப்பது குறித்து செயற்குழு மற்றும் பொதுக்குழுவும்தான் முடிவு செய்யும் என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தங்கள் பணிகளைத் தொடங்கி விட்டன நிலையில், பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள், அனைத்து மாநிலங்களிலும் கூட்டணிகளை உறுதி செய்யும் பணிகளை மறைமுகமாகவும் நேரடியாகவும் தொடங்க விட்டது.

பாஜக, காங்கிரஸ் கட்சிகள் மேல் அதிருப்தியில் இருக்கும் கட்சிகளை ஒன்றிணைக்கும் பணிகளில் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி தீவிரமாக இறங்கியுள்ளார். பாஜக கூட்டணியில் இருந்து விலகிய சந்திரபாபு நாயுடுவுக்கு, மம்தா பானர்ஜி பாராட்டு தெரிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து 3-வது அணி குறித்து பேசி வருகிறார்.

இந்த நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், பாஜகவின் சர்வாதிகார மற்றும் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக பல்வேறு அரசியல் கட்சிகளை இணைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சியை நான் ஆதரிக்கிறேன் டுவிட்டரில் நேற்று பதிவிட்டிருந்தார். இதையடுத்து, திமுக - காங்கிரஸ் கூட்டணியில் விரிசல் ஏற்படும் என்று கூறப்பட்டது. மு.க.ஸ்டாலினின் இந்த டுவிட்டர் பதிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், திமுகவின் முதன்மை செயலாளர் துரைமுருகன், மம்தா பானர்ஜியின் முயற்சிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து மட்டுமே கூறினார் என்றும், கூட்டணி குறித்து செயற்குழுவும், பொதுக்குழுவும்தான் முடிவு செய்யும் என்று கூறியுள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக அரசு ஒரு செயல்படாத அரசு. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. அவர்களுக்கு தேர்தலில் நிற்க வேண்டும், மக்களிடம் சென்று அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பது எல்லாம் கிடையாது.

இருக்கின்ற வரை அறுவடை செய்து கொண்டு செல்ல வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கமாக உள்ளது. அதனால் இந்த அதிமுக ஆட்சியில் மக்கள் எதையும் எதிர்பார்க்க முடியாது.

மாநில கட்சிகளை ஒருங்கிணைக்கும் மம்தா பானர்ஜியின் முயற்சிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து மட்டும்தான் தெரிவித்து உள்ளார். ஆதரவு தெரிவிப்பது குறித்து செயற்குழுவும், பொதுகுழுவும் தான் முடிவு செய்யும் என்றார்.