தற்போது திமுகவினர் வீட்டிலேயே உள்ள குழந்தைகளுக்குக்கூட தமிழ்ப் பெயர் வைப்பதில்லை என்று அக்கட்சியின் பொருளாளர் துரைமுருகன் தெரிவித்தார். 
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணி தலைமையகமான அன்பகத்தில் பேராசிரியர் பாலசுப்ரமணியன்  எழுதிய ‘திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்’ என்கிற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. நூல் வெளியீட்டு விழாவில் விழாவில் திமுக பொருளாளர் துரைமுருகன் பங்கேற்று பேசினார்.   
“தமிழ் உணர்வையும் சுயமரியாதை உணர்வையும் ஊட்ட வேண்டிய நிலை தற்போது உள்ளது. இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்கள்தான் ஜனநாயக உணர்வை நமக்கெல்லாம் ஊட்டினர். ஆங்கிலேயர்கள் மட்டும் வரவில்லையெனில், இந்தியா சோமாலியா போல் ஆகியிருக்கும்.
தற்போது நம்முடைய எதிரிகள் வேறுவிதமான உணர்வை நமக்கு ஊட்டிவருகிறார்கள். இந்தியாவை ஒரே மொழி, ஒரே இனம், ஒரே கலாச்சாரமாக மாற்ற முயற்சி செய்து வருகிறார்கள். அதை எதிர்க்கும் உணர்வை நாம் அனைவரும் பெற வேண்டும். தற்போது திமுகவினர் வீட்டிலேயேகூட உள்ள குழந்தைகளுக்குத் தமிழ் பெயர் வைப்பதில்லை. இதனால் தமிழ் அடையாளமே போய்வருகிறது. பல்வேறு மொழிகளை கற்றுகொள்வதில் தவறு இல்லை. ஆனால், அதே வேளையில் தமிழ் உணர்வை எப்போதும் விட்டுவிடக்கூடாது” என்று துரைமுருகன் பேசினார்.