Asianet News TamilAsianet News Tamil

பதவிக்காக காவிரி உரிமையை பறிகொடுக்காதீங்க.. பாஜகவுக்கு சாமரம் வீசாதீங்க.. எடப்பாடியாரை பிடிபிடித்த துரைமுருகன்

மாநில அரசுகள் சம்பளம் கொடுக்கும் ஓர் ஆணையத்தை, மத்திய அரசுத் துறையின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்? இந்த அடிப்படையான கேள்வியைக்கூட, தனக்குத் தானே கூட கேட்டுக் கொள்ளாமல், பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதான எதிர்கட்சித் தலைவரின் அறிக்கைக்கு பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது. ஆகவே காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு சென்றிருப்பது, தமிழகத்தின் உரிமைகளை வஞ்சித்து - தமிழக விவசாயிகளின் ஜீவாதார உரிமையான வேளாண்மைக் கனவுகளைத் தகர்ப்பதற்கே என்பதில் துளியும் சந்தேகமில்லை.
 

Duraimurugan attacked Edappadi palanisamy on cauvery management board
Author
Chennai, First Published Apr 30, 2020, 8:38 PM IST

தன்னுடைய பதவியும், தன்னுடையன் அரசும் நிலைத்தால் போதும் என்று காவிரி நீர் உரிமையைப் பறிகொடுக்க மத்திய பா.ஜ.க. அரசுக்கு சாமரம் வீச வேண்டாம் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் துரைமுருகன் விமர்சனம் செய்துள்ளார்.

Duraimurugan attacked Edappadi palanisamy on cauvery management board
இதுதொடர்பாக துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம், ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. ஒரு நிர்வாக நடைமுறை தொடர்பான நடவடிக்கை” என்றும், “விவசாயிகளின் நலன்களுக்கு இதனால் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது” என்றும் பூசி மெழுகி, பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையைக் காணும்போது, நெஞ்சில் ஆயிரம் யானைகள் மிதிப்பதைப் போன்று ஒரு அழுத்தம். பல ஆண்டுகாலமாக பல்வேறு வழக்குகள் மற்றும் பல்வேறு தடைகளைக் கடந்து, கிடைக்கவே கிடைக்காது என்று நம்முடைய எதிரிகள் சொல்லிக் கொண்டிருந்தபோது, படாதபாடுபட்டு காவிரி வழக்கில் இறுதி வெற்றி பெற்று, ‘காவிரி மேலாண்மை ஆணையம்’ அமைப்பதற்கு வழிவகுத்தவர், தலைவர் கலைஞர்.

Duraimurugan attacked Edappadi palanisamy on cauvery management board
தலைவர் கலைஞர்தான் - காவிரிப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு ஒரு நடுவர் மன்றம் அமைக்க வேண்டும் என்று முதன்முதலில் சட்டமன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்தவர்; காவிரிப் பிரச்சினை குறித்து கர்நாடகத்தோடு முதன்முதலில் பேச்சுவார்த்தை துவக்கியவர்; பிரச்சினை தீர்க்கப்படாமல் ஆண்டுகள் பல கடந்தபோது, ஒரு இறுதித் தீர்வு காண இந்தப் பிரச்சினையை மத்திய அரசின் கவனத்திற்கு முதன்முதலாக எடுத்துச் சென்றவர். “காவிரியின் மொத்த நீர் வரத்து எவ்வளவு என்று தெரிந்தால்தானே பங்கீடு செய்ய முடியும்” என்று மத்திய அரசு சொன்னவுடன், "உண்மை கண்டறியும் குழு" (fact finding committee) ஒன்றை அமைத்து காவிரியின் மொத்த நீர்வரத்தின் அளவைக் கண்டுபிடித்துக் கொடுத்தது; வி.பி. சிங் பிரதமராக இருந்த காலத்தில் காவிரிக்கு நடுவர் மன்றத்தைப் பெற்றத் தந்தது; இந்தக் காவிரி நடுவர் மன்றத்தில், இடைக்காலத் தீர்ப்பு வேண்டும் என்று கோரியது; ‘இடைக்காலத் தீர்ப்பு அளிக்க நடுவர் மன்றத்திற்கு அதிகாரம் இல்லை’ என்று நடுவர் மன்றம் சொன்னபோது, அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்திற்குப் போய், ‘காவிரி நடுவர் மன்றத்திற்கு இடைக்காலத் தீர்ப்பு வழங்க உரிமை உண்டு’ என்ற உத்தரவைப் பெற்றுத் தந்தது; இடைக்காலத் தீர்ப்பாக 205 டி எம்.சி.யைப் பெற்றுத்தந்தது; இறுதியில், காவிரிப் பிரச்சினைக்கு நடுவர் மன்றத்தில் இறுதித் தீர்ப்பு பெற்றத் தந்தது என, காவிரிப் பிரச்னைக்கு நுனி முதல் அடி வரையில் போராடியவரும் தலைவர் கலைஞர்தான்!Duraimurugan attacked Edappadi palanisamy on cauvery management board
அவர் இன்றைக்கு இருந்திருந்தால், காவிரி மேலாண்மை ஆணையத்தைக் கொண்டுபோய் மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்ட நிலையைக் கண்டு எவ்வளவு கொதித்திருப்பார் என்பதை நான் எண்ணிப்பார்க்கிறேன். இந்த நீண்ட போராட்டத்தில், 10 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுப் பணித்துறைக்கு அமைச்சராக இருந்தவன் - இந்த முக்கிய முடிவுகளில் எல்லாம் உடன் இருந்தவன் என்ற அடிப்படையில், பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள பொறுப்பற்ற இந்த அறிக்கைக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், பிரதான எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்களும் எழுப்பியுள்ள மிக முக்கியமான பிரச்னைக்கு, துறை அமைச்சரான முதல்வர் பதில் சொல்லாமல், துறைச் செயலாளரை விட்டு, அரைகுறையாக ஓர் அறிக்கை விட வைத்திருப்பது, முதலமைச்சர், ‘ரேபிட் டெஸ்ட் கிட்’ விவகாரத்தில் பதற்றத்துடன் இருக்கிறார் என்பதையே காட்டுவதாக அமைந்திருக்கிறது. ஆளும் அ.தி.மு.க.,வினர்தான் இப்படி என்றால், சில தமிழ்ப் பத்திரிகைகள்கூட இந்தச் செய்தியை இருட்டடிப்புச் செய்திருப்பதைப் பார்த்து நான் வெட்கப்படுகிறேன்,  வேதனைப்படுகிறேன். பாவம், அவர்களும் மத்திய - மாநில அரசுகளுக்கு அடகு போய்விட்டார்கள் போலும்!Duraimurugan attacked Edappadi palanisamy on cauvery management board
ஆனாலும், ‘இந்து’ பத்திரிகையும், ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ பத்திரிகையும் - அ.தி.மு.க. அரசு, காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசிடம் அடகு வைத்துவிட்ட அடாத செயலைக் கண்டு கொதித்து, இந்தச் செய்திக்கு உயிர் கொடுத்து வெளியிட்டிருக்கிறார்கள். அந்தப் பத்திரிகைகளுக்கு ஒரு பாராட்டு! எங்கள் கழகத் தலைவரும், நானும், “காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்திற்கு அதிகாரமும் இல்லை. விவசாயிகளின் நலன்களைக் காக்கும் அவசர உத்தரவுகளைப் பிறப்பித்து, தமிழகத்தின் உரிமையை நிலைநாட்டும் தன்னாட்சியும் இல்லை” என்று எவ்வளவோ வாதாடினோம், போராடினோம். ஆனால், “காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடாது” என்று, இப்போது பொதுப்பணித்துறை முதன்மைச் செயலாளர் கூறுவது போல், இத்துறையின் அமைச்சரான முதலமைச்சர் அப்போது பொய்வாதம் செய்து, “இல்லை... இல்லை... ஆணையத்திற்கு அனைத்து அதிகாரங்களும் இருக்கிறது” என்றார்.
ஆணையம் அமைக்கப்பட்ட ஜூன் 2018-லிருந்து இன்றுவரை, உச்சநீதிமன்ற இறுதித் தீர்ப்பின் கீழ் அரசிதழில் வெளியிடப்பட்ட, “காவிரி நீர் மேலாண்மைத் திட்டம்-2018”ல் வழங்கப்பட்டதாகச் சொல்லப்படும் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒரு உத்தரவினை, தமிழகத்திற்கோ அல்லது தமிழக விவசாயிகளுக்கோ, ஏன், சட்டப்படி நியாயமாக ஒரு உத்தரவினை, காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இதுவரை பிறப்பித்திருக்கிறதா? இல்லை! அவ்வளவுதான் ஆணையத்திற்கு அளிக்கப்பட்ட (!) அதிகாரம்.

Duraimurugan attacked Edappadi palanisamy on cauvery management board
“கோதாவரி மற்றும் கிருஷ்ணா வாரியமும் சேர்த்துதான் ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று, பொதுப்பணித்துறைச் செயலாளர் கூறியிருக்கிறார். பாவம். அவர், உச்சநீதிமன்றம் 16.2.2018 அன்று அளித்த காவிரி இறுதித் தீரப்பைக் கூட படித்துப் பார்க்கவில்லை போலும். மத்திய அரசின் வழக்கறிஞர், “கோதாவரி, கிருஷ்ணா நதிநீர் பிரச்சினையில், நடுவர் மன்ற உத்தரவுகளை நிறைவேற்றத் திட்டம் (Scheme) ஏதும் தயாரிக்கப்படவில்லை. காவிரி நதிநீர் நடுவர் மன்றத் தீர்ப்பில் மட்டுமே இப்படியொரு ஸ்கீம் தயாரிக்கப்பட்டுள்ளது” என்று வாதாடி, மேற்கண்ட 16.2.2018 தீர்ப்பிலேயே, அது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. ஆகவே கோதாவரி, கிருஷ்ணா வாரியங்கள் வேறு; காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையம் என்பது வேறு.
நம் ஆணையம் முழுக்க முழுக்க உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட ஸ்கீமின் அடிப்படையில் செயல்படும் ஆணையம்! இந்த அடிப்படை கூட பொதுப்பணித்துறையின் செயலாளருக்கே தெரியவில்லை. இந்த லட்சணத்தில்தான் அதிமுக ஆட்சி நடைபெறுகிறது! “அமைச்சகத்தின் கீழ் இந்த ஆணையம் கொண்டு வரப்பட்டது முற்றிலும் நிர்வாக நடவடிக்கை” என்றும், “இதர நிர்வாகங்களை மேற்கொள்ள, இது ஒரு வழக்கமான நடைமுறை” என்றும் முதன்மைச் செயலாளர் கூறியிருக்கிறார். அவருக்காக நான் மிகவும் பரிதாபப்படுகிறேன். பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளராக இருப்பவர், 18.5.2018 தேதியன்று வெளியிடப்பட்டுள்ள “காவிரி நீர் மேலாண்மைத் திட்டம்-2018” மற்றும் 1.6.2018 அன்று அமைக்கப்பட்ட காவிரி நீர் மேலாண்மை ஆணையம் குறித்த எந்த உத்தரவுகளையும் படிக்கவில்லை என்றே தெரிகிறது.Duraimurugan attacked Edappadi palanisamy on cauvery management board
உச்சநீதிமன்றம் அங்கீகரித்து - மத்திய அரசால் அரசிதழில் வெளியிடப்பட்ட ,“காவிரி நீர் மேலாண்மைத் திட்டம்-2018”ல் உள்ள பிரிவு 5(a)-ல் “ஆணையத்தின் நடைமுறைகள் (Business) குறித்த விதிமுறைகளை ஆணையமே உருவாக்கும்” என்றும், “ஆணைய உறுப்பினர்கள், செயலாளர், மற்ற அதிகாரிகளுக்கு அதிகாரத்தைப் பகிர்ந்தளிப்பது”, “ஆணையத்தின் செயல்பாடுகளை வகைப்படுத்திக் கொள்வது போன்றவற்றையும் ஆணையமே செய்து கொள்ளும்” என்றும் வரையறுக்கப்பட்டுள்ளது. பிரிவு 5(c)-ல்," The Authority shall frame its own rules for the conduct of its business” என்று தெளிவாகவே உள்ளது. பிரிவு 7-ல், “ஆணையத்திற்குத் தேவையான அனைத்து ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளை ஆணையமே நியமிக்கும்.” என்று கூறப்பட்டுள்ளது.
முதன்மைச் செயலாளர் இன்னொரு அபத்தமான விளக்கத்தை அறிக்கை வாயிலாக அளித்துள்ளார். “ஆணையத்தின் பணியாளர்களுக்குச் சம்பளம் வழங்குவது தொடர்பான நடைமுறைக்காகவே, ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் கொண்டு வரப்பட்டுள்ளது” என்று, வடிகட்டிய பொய்யைக் கூறியிருக்கிறார். காவிரி திட்டப் பிரிவு 8(1)ல், ஆணையத்தின் சம்பளம் பற்றி விளக்கி, “கேரளா 15 சதவீதம், கர்நாடகா 40 சதவீதம், தமிழ்நாடு 40 சதவீதம், பாண்டிச்சேரி 5 சதவீதம் என்ற அடிப்படையில் ஆணையத் தலைவரின் சம்பளம் உள்பட ஆணையத்தின் அனைத்துச் செலவுகளையும் நதிநீர் பகிர்வு உரிமையுள்ள நான்கு மாநிலங்களும் கொடுக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
மாநில அரசுகள் சம்பளம் கொடுக்கும் ஓர் ஆணையத்தை, மத்திய அரசுத் துறையின் கீழ் ஏன் கொண்டு வர வேண்டும்? இந்த அடிப்படையான கேள்வியைக்கூட, தனக்குத் தானே கூட கேட்டுக் கொள்ளாமல், பொதுப்பணித்துறையின் முதன்மைச் செயலாளர் பிரதான எதிர்கட்சித் தலைவரின் அறிக்கைக்கு பொறுப்பற்ற முறையில் பதில் அளித்துள்ளது மிகுந்த வருத்தமளிக்கிறது. ஆகவே காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தை ஜல் சக்தி அமைச்சகத்தின் கீழ் கொண்டு சென்றிருப்பது, தமிழகத்தின் உரிமைகளை வஞ்சித்து - தமிழக விவசாயிகளின் ஜீவாதார உரிமையான வேளாண்மைக் கனவுகளைத் தகர்ப்பதற்கே என்பதில் துளியும் சந்தேகமில்லை.Duraimurugan attacked Edappadi palanisamy on cauvery management board
“காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்” என்று பெயரளவிற்கு ஒரு அறிவிப்புச் செய்த அ.தி.மு.க. அரசு, அமைதியாகவும், ரகசியமாகவும் காவிரி மேலாண்மை ஆணையத்தை மத்திய அரசிற்குத் தாரை வார்த்திருக்கிறது. இது காவிரி டெல்டா பகுதிகளை, சகாராப் பாலைவனமாக்கும் உள்நோக்கத்தின் வெளிப்பாடே! ஆகவே எங்கள் கழகத் தலைவர் கேட்டிருப்பது போல், மத்திய அரசின் இந்த முடிவை முதலமைச்சர் எதிர்க்க வேண்டும் என்றும், தமிழக அமைச்சரவையைக் கூட்டி மத்திய அரசின் அறிவிப்பைத் திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் - காவிரி நதிநீர் உரிமையை நிலைநாட்டிட நடவடிக்கை எடுப்பதற்குப் பதில், தனது பதவியும் - தன் அரசும் நிலைத்தால் போதும் என்று, காவிரி நீர் உரிமையைப் பறிகொடுக்க மத்திய பா.ஜ.க. அரசுக்கு சாமரம் வீச வேண்டாம்” என்று அறிக்கையில் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios