Duraiamurugan condemned ramadoss
கருணாநிதி ஏதோ தமிழ்நாட்டைக் கெடுத்து விட்டார் என்பது போலவும் ராமதாஸ் அளித்துள்ள பேட்டியை, திமுக தொண்டன் மட்டும் அல்ல பாமகவில் உள்ள உண்மையான தொண்டர்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
பாமகவின் 30ஆவது ஆண்டுவிழாவை முன்னிட்டு பாமக நிறுவனர் ராமதாஸ் தி இந்து தமிழ்திசை நாளிதழுக்கு அளித்த பேட்டியில், “திமுக, அதிமுக யாரோடு கூட்டணியில் இருந்தாலும், பாமக நிற்கும் இடங்களில் இந்த இரு கட்சிகளும் தங்களுக்குள் ஒரு கள்ளக் கூட்டணியை உருவாக்கி எங்களைத் தோற்கடிப்பதைப் பல சமயங்களில் செய்திருக்கிறார்கள்” என்று கூறியிருந்தார். அவரது இந்த கருத்துக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக திமுக முதன்மைச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில், “ பாமகவின் முப்பதாவது ஆண்டு விழாவையொட்டி, பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் “கூட்டணியில் இருந்தாலும் திமுகவும், அதிமுகவும் தங்களுக்குள் கள்ளக் கூட்டணியை உருவாக்கி எங்களைத் தோற்கடித்தார்கள்” என்று மனசாட்சியை வங்காள விரிகுடா கடலில் தூக்கியெறிந்து விட்டு ராமதாஸ் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

திமுகவுடன் கூட்டணியில் இருந்த நேரங்களில் எல்லாம் சட்டமன்றத் தொகுதிகளிலும், மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றதோடு மட்டுமின்றி, தனது மகன் அன்புமணிக்கு மாநிலங்களவைப் பதவியையும் வாங்கிக் கொண்டு, தலைவர் கருணாநிதியின் ஆதரவில் அன்புமணி மத்திய அமைச்சராகவும் பதவியேற்றதை எல்லாம் வசதியாக மறந்து விட்டு அல்லது மறைத்துவிட்டு திமுகவின் மீது வஞ்சக எண்ணத்துடன் நச்சுக் குற்றச்சாட்டைச் சுமத்துவதா” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
பெரியார் அண்ணாவிற்குப் பிறகு உள்ள திராவிடக் கட்சிகள் எனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியிருக்கும் ராமதாஸ் 1999, 2004 ஆகிய நாடாளுமன்றத் தேர்தல்களிலும், 2006, 2011 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களிலும் திமுகவுடன் கூட்டணி வைத்த போது, திராவிடக் கட்சி மீது உடன்பாடு இல்லாமல்தான் கூட்டணி வைத்தாரா என்று கேள்வி எழுப்பியுள்ள துரைமுருகன், “அந்தத் தேர்தல்களில் பாமகவிற்கும் செல்வாக்குள்ளதாகக் கருதப்படும் தொகுதிகளில் திமுக தோற்றதே, அதற்கு அதிமுகவுடன் அவர் வைத்துக் கொண்ட ‘கள்ளக் கூட்டணி’தான் காரணமா? ஊழலை ஒழிக்க முதன் முதலில் தமிழ்நாட்டில் சட்டம் கொண்டு வந்தவர் கருணாநிதி என்பதையும், மதுவிலக்கை அமல்படுத்துவதில் அக்கறை எடுத்துக் கொண்டு, மது பானக்கடைகளின் எண்ணிக்கையையும் குறைத்து, விற்பனை நேரத்தையும் அதிரடியாகக் குறைத்தவர் கருணாநிதி என்பதையெல்லாம் மறந்து விட்டு, நெஞ்சத்தில் நஞ்சுடன் “தமிழ்நாடு ஊழல் மாநிலமாக, குடிபோதை மாநிலமாக மாறக் காரணம்” என்று சந்தர்ப்பவாத அரசியலுக்காக, அபாண்டமாகப் பழி சுமத்தியுள்ள அவர்கள் அரசே சாராயத்தை விற்கும் என்று ஊருக்கு ஊர் டாஸ்மாக் கடைகளைத் திறந்த அதிமுக அரசைக் குறை கூறி வாய்திறக்கத் தயங்குவது ஏன்? இது எந்த மாதிரியான கள்ள உறவு? அல்லது எதிர்காலக் கள்ள உறவுக்கு அடிக்கல் நாட்டுகிறாரா” என்று விமர்சித்துள்ளார்.
முழுப் பூசணிக்காயை இலைச்சோற்றில் மறைப்பது போல் மறைக்க முயற்சித்து, திமுக ஏதோ பாமகவை வஞ்சித்து விட்டது போலவும், கருணாநிதி ஏதோ தமிழ்நாட்டைக் கெடுத்து விட்டார் என்பது போலவும் ராமதாஸ் அளித்துள்ள பேட்டியை, திமுக தொண்டன் மட்டும் அல்ல பாமகவில் உள்ள உண்மையான தொண்டர்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தனது அறிக்கையில் துரைமுருகன் கூறியுள்ளார்.
