சட்டசபையில் நேற்று முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு இரங்கல் தெரிவித்த கூட்டத்தில் கதறி அழுத திமுக பொருளாளர் துரைமுருகன்  திடீர் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று அதிகாலை அவர் திடீரென நெஞ்சு வலியால் அவதிப்பட்டதைத் தொடர்ந்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்துவருவதாகவும் தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

நேற்றைய சட்டசபை உரையின்போது மிகவும் உணர்ச்சி வசப்பட்டு காணப்பட்ட அவர் ஒரு கட்டத்தில் கதறி அழத்துவங்கினார். அவர் பேசுகையில்,’என்னை இந்த மன்றத்தில் பேச அழைக்கும் போதெல்லாம் உணர்ச்சியோடு, எழுச்சியோடு எழுந்து நிற்பேன். ஆனால் இன்று கலைஞருக்காக இரங்கல் தீர்மானத்தில் பேச அழைத்த போது உடல் தளர்ந்து உள்ளம் சோர்ந்து துவண்ட நிலையில் இருக்கிறேன்.

எனக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தபோது 2-வது முறையாக உயிர் கொடுத்தவர். நான் அன்று இறந்திருந்தால் எனது உடல் மீது அவர் கண்ணீர் சிந்தி இருப்பார். ஆனால் எனது துர்பாக்கியம் என் தலைவர் உடல் மீது நான் கண்ணீர் சிந்தும் நிலை ஏற்பட்டு விட்டது.

இவ்வாறு அவர் பேசும் போது கண்ணீர் விட்டு கதறி அழுதார். அவர் பேச முடியாமல் இருக்கையில் அமர்ந்ததும் கதறி கதறி அழுதார். அவரை மு.க. ஸ்டாலின் ஆறுதல் படுத்தினார்.