தனது மகனை வெற்றி பெற வைக்க கருணாநிதி பாணியில் நடிப்பு அரசியலை கையில் எடுத்துள்ள துரைமுருகன் தன் மகனை கொல்லப்பார்ப்பதாக அதிர்ச்சி குண்டை தூக்கி வீசியிருக்கிறார். 

ஆதாயம் இல்லாமல் ஆண்டி ஆற்றில் இறங்க மாட்டான் என்பதுபோல மவுனமாக அழுதாலும், மண்டி போட்டு அழுதாலும் அதில் கருணாநிதியின் சுயநலம் கட்டாயம் இருக்கும். எப்போதெல்லாம் தோல்வி வரப்போகிறது... இழுபறி நிலவப்போகிறது என கருணாநிதி உணர்கிறாரோ அப்போதெல்லாம் அனுதாபம் தேடும் வகையில் அனுதாப அரசியலை கையில் எடுத்து விடுவார்.

2001ல் கருணாநிதி நள்ளிரவில் கைது செய்யப்பட்டார். கருணாநிதியின் நள்ளிரவு கைது சம்பவத்தை திரும்பத் திரும்ப காலை முதல் தொடர்ந்து போட்டுக் காட்டிய பெருமை அவர்களின் குடும்பத் தொலைக்காட்சிக்கு இருந்தது. கருணாநிதி கைதின் போது அவர் முதன்முதலில் அழைத்தது முரசொலிமாறனைத் தான். முரசொலி மாறன் அப்போது மத்திய அமைச்சராக இருந்தார். "அய்யோ கொல்றாங்களே, கொல்றாங்களே" என்ற கருணாநிதியின் கூக்குரல் சுப்ரபாதம் போல அவர்களின் குடும்பத் தொலைக்காட்சியில் போட்டுக் காட்டப்பட்டு மக்களின் அனுதாபத்தைப் பெற்றதை யாராலும் மறக்க முடியாது.தொடர்ந்து சட்டமன்றத்தேர்தலில் போட்டியிட்ட கருணாநிதி 1984 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. 1983-ல் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக அவரும் கூட்டாளியான க.அன்பழகனும் தங்களது எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்துவிட்டனர். அதில் ஒரு உள் நோக்கம் இருந்தது. அடுத்து கருணாநிதி மேலவை உறுப்பினராக ஆகிவிட்டார். உண்மையில் அவர் சட்ட மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதாலேயே போட்டியிடவில்லை.

அது கருணாநிதியின் ராஜதந்திரம். இந்தத் தேர்தலின்போதுதான் எம்.ஜி.ஆர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை பெற்று திரும்பியிருந்தார். அத்தோடு அதிமுகவுடன் அப்போது காங்கிரஸ் கட்சி தேர்தல் கூட்டணி ஏற்படுத்தியிருந்தது. பிரதமராக இருந்த இந்திரா காந்தி 1984-ல் சுட்டுக் கொல்லப்பட்டிருந்ததால், காங்கிரஸ் மீது அப்போதும் அனுதாப அலை இருந்தது. இந்தக் கணக்குகளை சரியாக கணித்த கருணாநிதி, 1984 தேர்தல் எம்ஜிஆருக்கு சாதகமாக இருப்பதை உறுதிப்படுத்தி தேர்தலில் போட்டியிடவில்லை. இதனால் தங்களுக்கு அனுதாபம் கிடைக்கும் என எதிர்பார்த்தார் கருணாநிதி. அடுத்தடுத்த தேர்தல்களின் போது  தனக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி மருத்துவமனையில் படுத்துக்கொண்டு அனுதாபம் தேடுவார். மகள் கனிமொழியை யாரோ ஒருவர் தாக்கியதாக நாடகமாடி அதன் மூலம் அனுதாபத்தை பெற்று கனிமொழிக்கு முக்கிய அந்தஸ்து கிடைக்கச் செய்தார். 

அதேபோல் மு.க.ஸ்டாலினுக்கு அடையாளம் தெரியாதவர்கள் கொலை மிரட்டல் விடுப்பதாகக் கூறி மகனுக்கு பாதுகாப்பை அதிகரிக்கச் செய்தார். இதனால் கிடைக்கப்பட்ட அனுதாபத்தை வைத்து மு.க.ஸ்டாலின் ஃபோகஸ் செய்யப்பட்டார். கடந்த சில தேர்தல்களின் போது பிரச்சாரத்தில் இது தான் நான் சந்திக்கப்போகும் கடைசி தேர்தலாக இருக்கும். அடுத்த தேர்தலுக்குள் நான் இறந்து விடுவேன் என கூட்டத்தில் பேசி அனுதாபத்தை வெற்றியாக அறுவடை செய்து கொள்வார் கருணாநிதி. 

ஒரு கட்சியின் தலைவருக்கு தொலைநோக்குப் பார்வை எவ்வளவு அவசியமானதோ அவ்வளவு முக்கியமனது தேர்தல் அரசியலின் நெழிவு சுழிவுகளைத் தெரிந்து வைத்திருப்பது. அதில் எப்போதுமே கருணாநிதி வல்லவர்தான். அதிலும் அனுதாபத்தை தேடிக் கொள்வது அவருக்கு கை வந்த கலை. அதையே அவரது மரணத்தை வைத்து அவரது வாரிசுகள் அனுதாபம் தேடிக் கொண்டனர். மெரினா கடற்கரையில் கருணாநிதி சமாதிக்கு இடம் கிடைத்த பிறகும் அந்த விவகாரத்தை பூதாகரமாக்கி அதிமுகவை கொடுங்கோலாட்சியாக சித்தரித்து அனுதாபம் தேடிக் கொண்டது திமுக. மக்களவை தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘கருணாநிதிக்கு மெரினாவில் இடம் கொடுக்காமல் தடுத்த எடப்பாடி ஆட்சிக்கு பாடம் கற்பிக்க வேண்டாமா? என இப்போது வரை மெரினா மக்களவை தேர்தலில் பிரச்சாரம் செய்து அனுதாபம் தேடினார்கள்.   

இப்போது அதே பாணியை தனது மகன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கையிலெடுத்து இருக்கிறார் துரைமுருகன். கடந்த முறை மக்களவை தேர்தல் நிறுத்தப்பட்ட போதே கண்ணீர் விட்டு கதறி அழுது தொண்டர்களின் இரக்கத்தை சம்பாதித்துக் கொண்டார். தேர்தலுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ‘’எங்கள் வீட்டில் யாரோ பணத்தைக் கொண்டுவந்து வைத்துவிட்டுப் போய் விட்டனர். அவர்களே வருமான வரித்துறையினரை அனுப்பி இருக்கின்றனர். எங்கள் விட்டு வேலைக்காரருக்கு யாரோ செல்போன் வாங்கிக் கொடுத்திருக்கிறார்கள். என்னுடைய மகனை லாரி ஏற்றி கொல்ல சதித் திட்டம் தீட்டுகிறார்கள். அந்த துரோகி யார் என்பது எனக்குத் தெரியும். ஆனால் அவரது பெயரை நான் சொல்ல மாட்டேன்’’ எனக் கூறி கண்ணீர்விட்டு கதறுகிறார் துரைமுருகன்.

ஆக கருணாநிதியின் அனுதாப அரசியல் துரைமுருகனுக்கு கைகொடுக்குமா என்பது தேர்தல் முடிவன்று தெரிந்து விடும்.