due to dengue fever problem cuddalore government hospital restrict media
தமிழகத்தில் மிக மோசமாகப் பரவி பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது, டெங்கு காய்ச்சல். டெங்கு காய்ச்சலுக்குக் காரணமான கொசுக்களை ஒழிக்கும் தடுப்பு நடவடிக்கைகள் ஒருபுறம் என்றால், காய்ச்சலுக்கான மருத்துவம், மருத்துவ வசதிகளை ஏற்படுத்துதல் ஆகியவற்றில் மெத்தனப் போக்கு இருப்பதாக பரவலாக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்படுகின்றன.
இந்நிலையில், இன்று காலை கோவை அரசு மருத்துவமனையில் டெங்கு நோயாளிகளைப் பார்வையிடச் சென்ற தேமுதிக., தலைவர் விஜயகாந்தின் மனைவி பிரேமலதாவுக்கு மருத்துவமனையில் அனுமதி மறுக்கப்பட்டதால் பெரும் பிரச்னை ஏற்பட்டது. தேமுதிக நிர்வாகிகள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதே போல், டெங்கு குறித்த செய்திகளை சேகரிப்பதற்கு, படங்கள் எடுப்பதற்குச் செல்லும் ஊடகத்தினரை தடுக்கும் நடவடிக்கைகள் பரவலாக இருந்து வருவது ஊடகத்தினர் மத்தியில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது.
இது போல், கடலூர் அரசு மருத்துவமனையில் செய்தியாளர்கள் செய்தி சேகரிக்கத் தடை விதித்து போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதைக் கண்டு, பொதுமக்களும் பத்திரிகையாளர்களும் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
கடலூர் மாவட்டத்தில் நூற்றுக்கணக்கானோர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு பலர் இறந்துள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கவும், டெங்கு பரவாமலிருக்கவும் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது. இதில், பலர் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், டெங்கு நோய் குறித்த 'டெங்கு எலிஸா' பரிசோதனைக்கான வசதியும் இந்த மருத்துவமனையில் மட்டுமே உள்ளது.
இந்நிலையில் திடீரென "இந்த மருத்துவமனையில் இணை இயக்குநர் அனுமதி இன்றி புகைப்படமோ அல்லது வீடியோவோ எடுக்கக்கூடாது. பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுக்கும் அதிகாரம் இணை இயக்குநருக்கு மட்டுமே உள்ளது" என்று மருத்துவமனை நிர்வாகத்தால் மருத்துவமனை வளாகத்தில் போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. இதைக் கண்டு பலரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இறந்தவர்களும் கூட, மர்மக் காய்ச்சலால் இறந்துபோனார்கள் என்றுதான் சான்று கொடுப்பதாகக் கூறப்படுகிறது. டெங்கு காய்ச்சலால் ஏற்படும் இறப்பு குறித்த விவரங்களை சரியாகக் கொடுப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால் ஆட்சிக்கு கெட்ட பெயர் வரும் என்பதால், டெங்கு பாதிப்பை மூடி மறைக்க மருத்துவமனை நிர்வாகம் முயற்சி செய்வதாகச் சொல்கிறார்கள். கழிப்பிட வசதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், படுக்கை வசதி என அடிப்படை வசதிகள் அற்ற நிலையை வெளியிட்டு விடுவார்கள் என்பதால், பத்திரிகையாளர்களை உள்ளே அனுமதிக்க தடை செய்கிறார்கள் என்பதாக மருத்துவமனை ஊழியர்கள் சிலரே சொல்கின்றனராம்.
