விடுதலைச் சிறுத்தைகள் மீது நடத்தப்பட்ட வன்முறை தொடர்பாக டாக்டர் அன்புமணி ராமதாஸை கடுமையாக விமர்சித்துள்ள மனநல மருத்துவர் ஷாலினி ‘டாக்டர் படிப்புக்காக கல்லூரிக்குப் போனது முக்கியமல்ல. அங்கே என்ன கற்றோம் என்பதுதான் முக்கியம்’ என்று தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அரியலூர் மாவட்டம் பொன்பரப்பியில் பா.ம.க. அரங்கேற்றிய வன்முறைக்கு அரசியல் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், சமூகப்போராளிகள் பலரும் தங்கள் எதிர்ப்பைப் பதிவிட்டுவரும் நிலையில், தனது கருத்தை முகநூலில் தெரிவித்துள்ள டாக்டர் ஷாலினி... நான் ஒரு மருத்துவராய் இருப்பதில் எனக்கு எந்த பெருமையும் எப்போதும் இருந்ததில்லை. மருத்துவம் என்பது அதிலும் குறிப்பாக மனநல மருத்துவம் என்பது நிறைய சோகம் நிறைந்த பணி. இந்த நோய்களே இல்லாமல் இருந்திருக்க கூடாதா?! என்று எண்ணும் அளவிற்கு பல விதமான மனித துயரங்களை தினமும் பார்க்க வேண்டிய பணி. இதில் பெருமை எங்கிருந்து வரும்?!

ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மருத்துவராய் இருப்பதில் எனக்கு பெருமை வந்து சேர்ந்தது..... நீதி கட்சியை துவக்கிய நடேசனாரும், டி எம் நாயர் அவர்களும் மருத்துவர்கள் என்று அறிந்த அன்றிலிருந்து நானும் அவர்கள் வகையறா, அதே கல்லூரி என்று எனக்கு மிகுந்த மகிழ்ச்சி.

ஆனால் என் கல்லூரியில் தான் மரு அன்புமணி ராமதாஸும் படித்தார். அவர் மட்டும் ஏன் இப்படி ஜாதி வெறியர்களை இன்னும் அடக்காமல் இருக்கிறார் என்று நினைக்கும் போது, கல்லூரி அல்ல, முக்கியம். கற்றவை தான் முக்கியம் என்றே தோன்றுகிறது’ என்று மிகக் கடுமையாகக் கேள்வி எழுப்பியிருக்கிறார்.