Asianet News TamilAsianet News Tamil

அந்த தேர்வால் தற்கொலை ஆபத்து... அதை நிரந்தரமாக ரத்து செய்தாகணும்... கோபத்தில் கொந்தளித்த டாக்டர் ராமதாஸ்!

 நீட் தேர்வு நீடித்தால் ஒவ்வொரு ஆண்டும் இன்னும் பல மாணவர்கள் நீட் தேர்வு கொடுக்கும் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்து உள்ளது. இதைத் தடுக்க நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Dr. Ramadoss statement against neet exam
Author
Chennai, First Published Sep 9, 2020, 8:43 PM IST

இதுதொடர்பாக டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த எலந்தங்குழியைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வு குறித்த மனஉளைச்சலால் கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார் என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. காலமான மாணவர் விக்னேஷின் குடும்பத்திற்கு பாமக சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.Dr. Ramadoss statement against neet exam
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தை அடுத்த எலந்தங்குழியைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். நன்றாகப் படித்து வந்த அவர் 10-ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 500-க்கு 486 மதிப்பெண்களும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 1006 மதிப்பெண்களும் பெற்றுள்ளார். இரு ஆண்டுகளுக்கு முன்பே 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று விட்ட அவர், மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக நீட் தேர்வு எழுதி வந்தார். கடந்த ஆண்டு நீட் தேர்வில் 370 மதிப்பெண்களை விக்னேஷ் பெற்றார். அவருக்கு தனியார் கல்லூரியில் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைத்தது. 
ஆனால், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவரது குடும்பத்தினருக்கு தனியார் கல்லூரியில் சேர்க்க வசதி இல்லாததால், இந்த ஆண்டும் மீண்டும் நீட் தேர்வு எழுதத் தயாராகி வந்தார். நீட் தேர்வில் 500-க்கும் கூடுதலான மதிப்பெண்கள் பெற்றால் மட்டும்தான் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்கும் என்று பல்வேறு தரப்பினரும் கூறியதால் கடுமையான மன உளைச்சலில் விக்னேஷ் இருந்து வந்தார். அதன் காரணமாக இன்று அதிகாலை அவரது வீட்டிற்கு அருகிலுள்ள கிணற்றில் குறித்து தற்கொலை செய்துகொண்டார்.

Dr. Ramadoss statement against neet exam
மாணவர் விக்னேஷின் தற்கொலைக்கு நீட் தேர்வும், அதைக் கட்டாயமாகத் திணித்து, தொடர்ந்து நடத்திவரும் முந்தைய மற்றும் தற்போதைய ஆட்சியாளர்களும்தான் காரணம் என்று உறுதியாகக் கூற முடியும். அவர்கள்தான் மாணவர் விக்னேஷின் தற்கொலைக்கு பொறுப்பேற்க வேண்டும். 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களின் அடிப்படையில் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டிருந்தால், விக்னேஷ் எடுத்திருந்த மதிப்பெண்களின் அடிப்படையில் நிச்சயமாக இடம் கிடைத்திருக்கும். ஒருவேளை தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளையை அரசு தடுத்திருந்தால் கூட, நீட் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையில் கடந்த ஆண்டு தனியார் கல்லூரியில் விக்னேஷ் சேர்ந்திருப்பார். இரண்டையும் செய்யத் தவறியவர்கள்தான் விக்னேஷின் தற்கொலைக்கு பொறுப்பு ஏற்றாக வேண்டும்.

Dr. Ramadoss statement against neet exam
எந்த நோக்கத்திற்காக நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதாக மத்திய அரசும், இந்திய மருத்துவக் குழுவும் கூறி வந்தனவோ, அந்த நோக்கம் முற்றிலும் தோல்வியடைந்து விட்டது என்பதற்கு மாணவர் விக்னேஷின் தற்கொலை மீண்டும் ஒருமுறை உறுதி செய்திருக்கிறது. மருத்துவக் கல்வித் தரத்தை உயர்த்தவும், மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவதை தடுக்கவும்தான் நீட் தேர்வு கொண்டு வரப்பட்டதாக மத்திய அரசு கூறி வருகிறது. உண்மையாகவே மருத்துவக் கல்வியின் தரம் உயருகிறது என்றால், கடந்த ஆண்டு நீட் தேர்வில் விக்னேஷை விட, மிகவும் குறைந்த மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் பணத்தைக் கொட்டிக் கொடுத்து தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் சேர அனுமதிக்கப்பட்டிருக்கக் கூடாது. அதேபோல், மருத்துவக் கல்வி வணிகமயமாக்கப்படுவது கட்டுப்படுத்தப்பட்டிருந்தால், நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் சேர இடம் கிடைத்த நிலையில், விக்னேஷிடம் பணம் இல்லை என்பதைக் காரணம் காட்டி அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கக் கூடாது. இந்த இரண்டுமே நடக்காத நிலையில் நீட் தேர்வால் யாருக்கு என்ன பயன்?Dr. Ramadoss statement against neet exam
தனியார் கல்வி நிறுவனங்களும், தனியார் சிறப்பு பயிற்சி நிறுவனங்களும் கொள்ளை லாபம் ஈட்டுவதற்காகவே நீட் தேர்வு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கிறது. இதே நிலை நீடித்தால் ஒவ்வொரு ஆண்டும் இன்னும் பல மாணவர்கள் நீட் தேர்வு கொடுக்கும் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்ளும் ஆபத்து உள்ளது. இதைத் தடுக்க நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய மத்திய அரசு முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, தற்கொலை செய்து கொண்ட விக்னேஷின் குடும்பத்திற்கு தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் நிதி உதவியும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க தமிழக முதலமைச்சர் முன்வர வேண்டும்.” என்று அறிக்கையில் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios