தமிழகத்தில் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவரும் நிலையில், அதன் பரவலை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டுள்ளன. அதன் ஒரு பகுதியாக இன்று மக்கள் ஊரடங்கு காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கடைபிடிக்க பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார். அதன்படி இன்று மக்கள் ஊரடங்கு முறை கடைபிடிக்கப்பட்டது. பல மாநிலங்களில் நீட்டிக்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட 75 மாவட்டங்களை மார்ச் 31 வரை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய மாவட்டங்களும் அடக்கம். இந்நிலையில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள் மட்டுமல்லாது, தமிழகம் முழுவதும் மார்ச் 31 வரை ஊரடங்கு உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். 
இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “கொரோனா பாதிப்பை தடுக்க தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்டங்கள்  உட்பட  இந்தியா முழுவதும் 75 மாவட்டங்களில் இம்மாதம் 31-ம் தேதி வரை ஊரடங்கை அமல்படுத்த மத்திய அரசு ஆணையிட்டுள்ளது. பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு இல்லை என்பதை உறுதிப்படுத்த முடியாது என்பதால் அனைத்து மாவட்டங்களுக்கும் இதை நீட்டிக்க வேண்டும்!” என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.