கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாளை தேசிய சுய ஊரடங்கை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை பொதுமக்கள் யாரும் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார். அதன்படி நாளை நாடும் முழுவதும் சுய ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. பிரதமரின் வேண்டுகோளை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என பல்வேறு தரப்பினரும் மக்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அரசின் நடவடிக்கைக்கு மக்கள் முழு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதை கட்டுப்படுத்துவது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை மக்கள் தங்களுக்கு தாங்களே ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துக் கொண்டு, அதை கடைபிடிக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.

கொரோனா பரவலை தடுக்க தனித்திருப்பதும், விழிப்புடன் இருப்பதும் தான் சிறந்த தீர்வு எனும் நிலையில், 14 மணி நேரம் மக்கள் ஒருவரை ஒருவர் நெருங்காமல் தவிர்க்கும் வகையிலான இந்த நடவடிக்கை பயனளிக்கக் கூடியதாகும். கொரோனா வைரஸ் தாக்குதலை 3-வது உலகப்போராக கருதி, அதன் பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் தடுக்க மக்கள் அனைவரும் தத்தமது பங்களிப்பை வழங்கி மனித குலத்தை காக்க வேண்டும். நாளை பகல் முழுவதும் அடையாள ஊரடங்கை மக்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் வலியுறுத்தியிருப்பதன் மூலம், முழு அடைப்புடன் கூடிய ஊரடங்கு தான் கொரோனாவை தடுக்கும் என்பது உறுதியாகியுள்ளது.

கொரோனா வைரஸ் சமூக அளவில் பரவத் தொடங்கி விட்டால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாது என்பதால், பிரதமர் அறிவுறுத்தியவாறு, நாளை இந்திய மக்கள் அனைவரும், குறிப்பாக தமிழக மக்கள் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை வீடுகளை விட்டு வெளியில் வரக்கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். இதை ஒரு நாளுக்கான செயல்பாட்டாக கருதாமல், அடுத்த ஒரு மாதத்திற்கு வாய்ப்புள்ள அனைத்து நாட்களிலும் கூடுமானவரை ஊரடங்கை கடைபிடிக்க மக்கள் முன்வர வேண்டும். அதுமட்டுமின்றி, கொரோனா தடுப்புக்காக மத்திய, மாநில அரசுகள் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் மக்கள் ஆதரவு அளிக்க வேண்டும்.

இவ்வாறு ராமதாஸ் தனது அறிக்கையில் கூறியுள்ளார்.