பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்திருப்பது அதிகார வரம்பு மீறிய செயல். இது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கண்டித்துள்ளார்.
கலை, அறிவியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று ஹரியானா மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.சி.குஹாத் தலைமையிலான குழு பல்கலைக்கழக மானியக்குழுவுக்கு பரிந்துரை செய்துள்ளது. இந்தத் தகவல் வெளியானதையடுத்து அரசியல் கட்சிகள் இந்தப் பரிந்துரையை எதிர்த்து வருகின்றன. பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், இந்தப் பரிந்துரைக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, ராமதாஸ்  தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தேசிய அளவில் இளநிலை மற்றும் முதுநிலை கலை - அறிவியல் படிப்புகளுக்கு பொது நுழைவுத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்ற ஹரியானா மத்திய பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.சி. குஹாத் தலைமையிலான குழுவின் பரிந்துரையை பல்கலைக்கழக மானியக்குழு ஏற்கக் கூடாது! கரோனா பாதிப்பு சூழலில் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளை எப்போது திறக்கலாம் என்பது குறித்து பரிந்துரைக்க அமைக்கப்பட்ட குஹாத் குழு, பட்டப்படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடத்த வேண்டும் என்று பரிந்துரை செய்திருப்பது அதிகார வரம்பு மீறிய செயல். இது கண்டிக்கத்தக்கது!
கரோனா பாதிப்பால் பல மாநிலங்களிலும், சிபிஎஸ்இ பாடத்திட்ட பள்ளிகளிலும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு இன்னும் நடத்தப்படவில்லை. இதனால் மாணவர்கள் மன உளைச்சலில் வாடும் நிலையில் எந்த நுழைவுத்தேர்வும் தேவையில்லை; நீட் தேர்வும் ரத்து செய்யப்பட வேண்டும்” என்று டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.