தமிழகத்தில் ஜனவரி 14 வரை பள்ளிக்கூடம் செயல்படும் என்ற அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுவதற்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ம்  தேதி உற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தப் பண்டிகைக்கு 13 முதல் 19 வரை விடுமுறை விடப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், உள்ளாட்சித் தேர்தலையொட்டி அரையாண்டு விடுமுறை நீட்டிக்கப்பட்டதால், பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாள் வரை பள்ளிகள் இயங்கும் என்று கூறப்படுகிறது. இந்த விஷயத்தில் அரசின் நிலைப்பாடு உறுதியாகத் தெரியவில்லை. 
இந்நிலையில் இதுதொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் ட்விட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ்நாட்டில் 14-ஆம் தேதி போகிப்பண்டிகை வரை பள்ளிகள், கல்லூரிகள் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதனால் விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ, மாணவியர் பொங்கல் திருநாளைக் கொண்டாட சொந்த ஊருக்கு செல்வதில் சிக்கல் ஏற்படும்! பொங்கல் திருநாள் கொண்டாட்டம் என்பது போகிப்பண்டிகையுடன் தொடங்குகிறது. எனவே போகியை கொண்டாடவும், விடுதி மாணவர்கள் பொங்கலுக்கு சொந்த ஊர் செல்ல வசதியாகவும் 14-ஆம் தேதியும் விடுமுறை வழங்க பள்ளிக் கல்வித்துறைக்கு தமிழக அரசு ஆணையிட வேண்டும்!” எனத் தெரிவித்துள்ளார்.