மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஆணையிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

 
நாடு முழுவதும் கடந்த 3 ஆண்டுகளில் நீட் தேர்வு மூலம் இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) சுமார்  11 ஆயிரம் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், இந்த இடங்கள் பறிக்கப்பட்டுள்ளதாக தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தில் இதர பிற்படுத்தப்பட்டோர் ஊழியர்கள் கூட்டமைப்பு புகார் கொடுத்துள்ளது. இதுகுறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி மத்திய சுகாதாரத் துறைக்கு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்களும் அறிக்கை வெளியிட்டு மத்திய அரசை விமர்சித்துவருகிறார்கள்.
இந்நிலையில், பாமக இளைஞரணித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், “மருத்துவக் கல்விக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்க ஆணையிடக் கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளேன். சமூகநீதியை வென்றெடுப்பதற்கான இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது!” என்று தெரிவித்துள்ளார்.