சூலூர் எம்.எல்.ஏ. மாரடைப்பால் மரணமடைந்த செய்தியில் உண்மை இல்லை என்றும் அவர் அருந்திய மதுவில் விஷம் கலந்து கொடுக்கப்பட்டதாலேயே அவர் இறந்திருக்கிறார் என்றும் ஒருவர் பேசிய வீடியோ வலைதளங்களில் தீப்பிடித்து வருகிறது.சம்பவம் நடந்த அன்று, காலை 7 மணிக்கு கனகராஜ் இறந்ததாக கூறப்பட்டது. ஆனால், சூலூரில் உள்ள அவரது கட்சியின் முக்கிய பிரமுகருக்கு, அதிகாலை 4 மணிக்கே அவர் இறந்த தகவல் கிடைத்தது எப்படி? என்பது புரியாத புதிராக உள்ளது. 

கோவை மாவட்டம் சூலூர் தொகுதியில் அதிமுக எம்.எல்.ஏ.வாக இருந்தவர் கனகராஜ். இவர் கடந்த மார்ச் 21ம் தேதி மரணம் அடைந்தார். இவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார் என அப்போது  அறிவிக்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில நாட்களாக எம்எல்ஏ மரணத்தில் மர்மம் இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.  வீடியோவில் பேசும் ஒருவர், எம்எல்ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடையவில்லை எனவும், அவருடன் இருக்கும் கட்சியினர் விஷம் கலந்த மதுவை கொடுத்து கொலை செய்திருக்கலாம் என்றும் கூறுகிறார். 

கனகராஜ் இறப்பதற்கு முன்தினம் மோப்பிரிபாளையம் பகுதியில் உள்ள அவரது கட்சியின் முக்கிய பிரமுகர் வீட்டில் அவர் மது அருந்தியதாகவும், அப்போது உணவருந்த வந்த கட்சியின் பிரமுகர், எம்எல்ஏவுக்கு அனுமதியில்லாத பாரில் இருந்து மது வரவழைத்து கொடுத்ததாகவும், மோப்பிரிபாளையம் கட்சி பிரமுகர் வீட்டிலேயே எம்எல்ஏ மரணம் அடைந்து விட்டதாகவும், அவரை காரில் ஏற்றி உடன் 2 பேரை அனுப்பி அவரது தோட்டத்து வீட்டில் படுக்க வைத்துவிட்டு வந்து விட்டதாகவும் அந்த நபர் தகவல் வெளியிட்டுள்ளார். 

அதற்கு அடுத்த நாள் அவர் தனது பண்ணை வீட்டில் இறந்து கிடந்ததாக ஜோடிக்கப்பட்டதாகவும் அந்த வீடியோவில் பேசியவர் ஆணித்தரமாக அடித்துக்கூறுகிறார்.