பாஜக ஆதரவு ஊடகங்கள் சொல்வது போல் அல்லாமல், மேற்கு மேற்கு வங்க தேர்தலில் இரட்டை இலக்கு இடங்களைப் பெறுவதற்கே பாஜக தத்தளிக்கும் என பிரபல அரசியல் ஆலோசகர் பிரஷாந்த் கிஷோர் கூறியுள்ளார். 

தொடர்ந்து 2வது முறையாக மத்தியில் ஆட்சி அமைத்துள்ள பாஜக அரசு, பல்வேறு மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றிப்பெற்று ஆட்சியை அமைத்து வருகிறது. குறிப்பாக பாஜகவின் அடுத்த குறி மேற்கு வங்க மாநிலமாக உள்ளது. 

இந்நிலையில், மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு ஏப்ரல்-மே மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ், பாஜக இடையேதான் கடும் போட்டி இப்போதிருந்தே நிலவி வருகிறது. 3-வது முறையாக ஆட்சியைப் பிடிக்க மம்தா பானர்ஜி தீவிரமாக பிரச்சாரத்தில் இறங்கியுள்ளார். ஆனால், ஆட்சியைப் பிடிக்க பாஜக பல்வேறு காய்களைத் திட்டமிட்டு நகர்த்தி வருகிறது.

இதில் திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குத் தேர்தல் வியூகங்களை பிரசாந்த் கிஷோர் தலைமையிலான நிறுவனம் வகுத்துக் கொடுத்து வருகிறது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே வார்த்தைப் போர் வலுத்து வருகிறது. இரு கட்சிகளின் மூத்த தலைவர்களும் காரசாரமாக விமர்சித்து வருகின்றனர். நேற்று உள்துறை அமைச்சர் அமித் ஷா முன்னிலையில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் அதிகாரி உள்ளிட்ட 7 எம்எல்ஏக்கள் பாஜகவில் இணைந்தனர்.

இந்நிலையில் பிரசாந்த் கிஷோர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்;-  குறிப்பிட்ட சில ஆதரவு ஊடகங்களின் அனைத்துவிதமான பிரச்சாரத்தால் பாஜக வலுவாகக் காண்பிக்கப்படுகிறது. உண்மையில், மேற்கு வங்கத்தில் நடக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக இரட்டை இலக்கத்தில் தொகுதிகளை வெல்லவே தடுமாறப் போகிறது. என்னுடைய  டுவிட்டர் பதிவைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக சிறப்பான வெற்றியைப் பெற்றுவிட்டால், நான் ட்விட்டரில் இருந்தே விலகிவிடுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.