எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு விரைவில் கவிழ்ந்துவிடும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். வேலூர் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய அவர், “கர்நாடகத்தில் நடந்தது போல தமிழகத்திலும் ஆட்சியைக் கவிழ்ப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆட்சியை திமுக கவிழ்க்க வேண்டிய அவசியமில்லை. தானாகவே கவிழப் போகிறது” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விருதுநகரிலுள்ள தனியார் கல்லூரி அடிக்கல் நாட்டு விழாவில் இன்று கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய பால்வளத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தமிழகத்தின் உரிமைகளைப் பற்றிப் பேச திமுகவுக்கோ அதன் கூட்டணிக் கட்சிகளுக்கோ அருகதை கிடையாது என தெரிவித்தார்.

அதிமுக மக்கள் விரும்பக் கூடிய போற்றக்கூடிய கட்சி. கர்நாடகத்தில் ஆட்சியைக் கலைத்தது போல தமிழகத்தில் எடப்பாடியார் ஆட்சியை ஸ்டாலின் கவிழ்க்க நினைத்தால் திமுகவை நாங்கள் இரண்டாக உடைத்துவிடுவோம் என ஆவேசமாக தெரிவித்தார்.

திமுகதான் எங்களுக்கு போட்டியே தவிர அமமுக எங்களுக்கு போட்டி இல்லை. மக்களவைத் தேர்தலுடன் அக்கட்சியின்  கதை முடிந்துவிட்டது. தினகரனிடம் தற்போது இருப்பது வெறும் குழு மட்டும்தான். சட்டத்திற்கு விரோதமான தொழில் செய்பவர்கள்தான் அமமுகவுடன் உள்ளனர். தோல்வியின் உச்ச கட்டத்தில் உளறிக்கொண்டிருக்கிறார் தினகரன். விரக்தியின் வெளிப்பாடுதான் அவருடைய பேச்சு என கிண்டல் செய்தார்.