ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு கடந்த 27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் இருக்கும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ், ரவிசந்திரன் ஆகியோரை விடுதலை செய்யாதீர்கள, சாகும்வரை சிறையிலேயே இருக்கட்டும் என்று குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட பெண் போலீஸ் அதிகாரி பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

அணுசுயா டெய்சி இவர்தான் அந்த போஸீஸ் அதிகாரி.  கடந்த 1981-ம் ஆண்டு போலீ்ஸ் கான்ஸ்டபிளாக பணியில் சேர்ந்து கடந்த மே மாதம் விழுப்புரம் ஏஎஸ்பியாக ஓய்வு பெற்றார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கடந்த 1991-ம் ஆண்டு, மே 21-ந்தேதி சிறீபெரும்புதூருக்கு தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும்போது மனிதவெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். இந்த குண்டுவெடிப்பில் 15-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலில் காயமடைந்த போலீஸ் எஸ்.ஐ அணுசுயா டெய்ஸி எர்னஸ்ட். இவர்தான் எழுவர் விடுதலைக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.

ராஜீவ்காந்தி கொல்லப்பட்டபோது போலீஸ் எஸ்ஐ ஆக இருந்த அணுசுயா அதன்பின் பதவி உயர்வு பெற்று ஏஎஸ்பியாக உயர்ந்து கடந்த மே மாதம் ஓய்வு பெற்றார். மனித வெடிகுண்டாக வந்த தாணு ராஜீவ்காந்தியை கொல்ல முயன்று அவரை நெருங்கியபோது, தாணுவைத் தடுத்து நிறுத்தியவர் போலீஸ் எஸ்.ஐ அணுசுயா. ஆனால், அவரை மீறி உள்ளே சென்ற தாணு தன் உடலில் கட்டியிருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்து சதித்திட்டத்தை நிறைவேற்றினார்.

இந்த குண்டுவெடிப்பி்ல பெண் போலீஸ் அதிகாரி அணுசுயா டெய்ஸிக்கு உடலில் இடதுபுறம் பலத்த காயம் ஏற்பட்டது, கையில் இரு விரல்கள் பாதிக்கப்பட்டு அதற்கு பதிலாக பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டது. ஏறக்குறைய 3 மாதங்கள் தீவிரமான மருத்துவசிகிச்சைக்கு பின் மீண்டும் பணிக்கு திரும்பினார்.

இந்நிலையில், ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் எழுவரை விடுவிப்பது தொடர்பாக சமீபத்தில் தமிழக அரசு முடிவு செய்து, ஆளுநருக்கு பரிந்துரை செய்தது. அந்த செய்தியைக் கேட்ட போலீஸ் அதிகாரி அணுசுயா மிகுந்த வேதனை அடைந்து எதிர்ப்பும் தெரிவித்தார். அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

ராஜீவ் கொலைக்குற்றவாளிகள் எழுவரை ஏன் விடுவிக்க வேண்டும் என்று எனக்குப் புரியவில்லை. அவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டால், வாழ்க்கை முழுவதும் சிறையில் இருக்கட்டும். வெளியே விடாதீர்கள்.  இந்த குண்டுவெடிப்பால்தான் நான் பாதிக்கப்பட்டேன், என் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டது. நான் மட்டுமல்ல, அந்த குண்டுவெடிப்பில் பல அரசியல் தலைவர்களின் குடும்பங்களும் பாதிக்கப்பட்டது, பலரும் தங்கள் உறவுகளை இழந்து தவித்தார்கள்.

இந்தத் தாக்குதலில் நான் படுகாயமடைந்தேன். என்னுடைய இடது கையில் இரு விரல்கள் சேதமடைந்து வெட்டி எடுக்கப்பட்டு பிளாஸ்டிக் சர்ஜரி செய்யப்பட்டன. என் உடலில் பல்வேறு இடங்களில் குண்டுகள் துளைத்திருந்ததால், பலமுறை குண்டுகளை எடுக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

ராஜீவ் கொலைக் குற்றவாளிகள் எழுவருக்கு கருணை காட்டக் கூடாது. எழுவர் விடுதலைக்காக போராடும் பலரும், வழக்கறிஞர்களும் குண்டுவெடிப்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர், உயிரிழந்தர்களின் குடும்பத்தினரின் கருத்துக்களை கேட்டார்களா, அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று அறிந்தார்களா. குண்டுவெடிப்பில் உயிர்களை இழந்தவர்களின் குடும்பத்தினர் என்ன துயரப்பட்டு இருப்பார்கள், காயமடைந்தவர்கள் உடல் உறுப்புகளை இழந்தவர்கள் என்ன அவஸ்தை பட்டிருப்பார்கள் என்று யாரேனும சிந்தித்தார்களா, அல்லது கருத்துக்கேட்டார்களா. எழுவருக்கும் கருணை காட்டக்கூடாது. அவர்களை விடுதலையும செய்யக்கூடாது

இவ்வாறு அந்த போஸீஸ் அதிகாரி தெரிவித்தார்.