எனது கைதால் விடுதலைச் சிறுத்தைகள் மகிழ வேண்டாம். பெண்களின் மாண்பு காக்க கடைசி மூச்சு வரை போராடுவேன் என நடிகை குஷ்பு டுவீட் செய்துள்ளார். 

அத்துடன் கைது செய்யப்பட்ட குஷ்புவை பண்ணை வீடு ஒன்றில் போலீசார் தங்க வைக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு அவர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரசில் இருந்து பாஜகவில் இணைந்த சில நாட்களிலேயே நடிகை குஷ்பு தமிழக அரசியலில் பரபரப்பை தொடங்கி விட்டார். மனுதர்மம் இறித்து விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் பேசியதற்கு எதிராக குஷ்பு சர்ச்சையை எழுப்பி போராட்டத்திலும் குதிக்கத் தயாராகி விட்டார். இதனால் தமிழகத்தில் பாஜக – வி.சிறுத்தைகள் இடையே பல இடங்களில் சலசலப்பு ஏற்பட்டு வருகிறது. இரு கட்சியினரும் போட்டி போட்டு போராட்டங்கள் நடத்தவும் தயாராகி விட்டனர்.

பெண்களை தரக்குறைவாக விமர்சித்ததாக விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவனுக்கு எதிராக போராட்டத்தை கையிலெடுத்துள்ள குஷ்பு, திருமாவளவனின் சொந்த தொகுதியான சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்திருந்தார் போட்டிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும் குஷ்புக்கு எதிராக போராட்டம் நடத்த போவதாக கூறியதால் பரபரப்பு தொற்றிக்கொண்டது.

இதனால் இரு தரப்புக்குமே போராட்டம் நடத்த போலீசார் அனுமதி வழங்கவில்லை. போராட்டத்திற்கு தடையும் விதித்தனர். இந்நிலையில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக கூறி சென்னையில் இருந்து சிதம்பரம் நோக்கி இன்று காரில் புறப்பட்டார் குஷ்பு. அவரை கிழக்குக் கடற்கரைச் சாலையில் முட்டுக்காடு போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட குஷ்புவை போலீசார் வேனில் ஏற்றி கேளம்பாக்கம் பண்ணை வீடு ஒன்றில் தங்க வைத்தனர். அங்கு குஷ்பு தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமது கைது சம்பவம் குறித்து நடிகை குஷ்பு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில்,எனது கைதில் விடுதலை சிறுத்தைகள் மகிழ வேண்டாம். பெண்களின் மாண்பு காக்க கடைசி மூச்சு இருக்கும் வரை போராடுவோம். எங்களின் பலத்தை கண்டுதான் போலீசார் கைது செய்துள்ளனர். நாங்கள் எதற்காகவும் பின்வாங்கப்போவதில்லை என குஷ்பு டுவீட் செய்துள்ளார்.

கைது செய்யப்பட்டு பண்ணை வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ள குஷ்பு இன்று மாலை 4 மணிக்கு மேல் தான் விடுதலை செய்யப்படுவார் என்று கூறப்படும் நிலையில், அதுவரை தமது தர்ணா போராட்டத்தை தொடர்வார் எனத் தெரிகிறது.