ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றுபவர்களின் அரசு வேலை, வெளிநாடு வேலை வாய்ப்பு தடையாகும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்தியா முழுவதும் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் ஊரடங்கு கடுமையாக்கப்பட்டுள்ளது. மிக
அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் பொதுமக்கள் வெளியில் வர அனுமதிக்கப்பட்டுள்ணர். இந்நிலையில், பலரும் காரணமின்றி ஊர் சுற்றுவது தொடர்கிறது. இதுபோன்ற நபர்கள் மீது காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு கைது செய்கின்றனர். அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படுகிறது.

திருச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்கள் அடங்கிய மத்திய மண்டலத்தில் 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 35 ஆயிரம் கைது செய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். திருச்சி மாநகரில் 1,048 வழக்குகளின்கீழ் 2,555 பேரையும் கைது செய்துள்ளனர். மாநிலம் முழுவதும் இந்த எண்ணிக்கை 1 லட்சத்தைத் தாண்டியுள்ளது.

கைது செய்யப்படுவோரை சொந்த பிணையில் விடுவித்தாலும் கூட, இவர்கள் மீதான வழக்குகள் காவல்துறையினரின் தொடர் நடைமுறைகளுக்கு உட்படுத்தப்படுவதாகவே உள்ளன. இதனால் வழக்கில் சிக்கியவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மண்டல ஐ.ஜி அமல்ராஜ் கூறுகையில்,’’ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் செயல்படக்கூடிய நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம், கொள்ளைநோய் தடுப்புச் சட்டம், தமிழ்நாடு பொது சுகாதாரச் சட்டம், பேரிடர் மேலாண்மைச் சட்டம் ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இவை சாதாரணமான பிரிவுகள் அல்ல.

குற்றவியல் வழக்கின்கீழ் வருவதால், இதில் குற்றவாளியாக சேர்க்கப்படும் நபர்களால் வழக்கு முடியும் வரை அரசு வேலைக்குச் செல்ல முடியாது.பாஸ்போர்ட் பெற முடியாது. கல்வி, தொழில், மருத்துவத்துக்காக வெளிநாடும் செல்ல முடியாது. அதேபோல தற்போது தனியார் நிறுவனங்களில்கூட காவல்துறையினரின் விசாரணை அறிக்கை பெற்ற பிறகே பணிக்கு அமர்த்துவதால், இவ்வழக்கில் சிக்குவோரால் முன்னணி தனியார் நிறுவனங்களிலும் வேலைக்கு சேர முடியாது.

எனவே இளைஞர்களும், பொதுமக்களும் அவசியமின்றி வீடுகளை விட்டு வெளியே வந்து வழக்கில் சிக்கி வாழ்க்கையைத் தொலைக்காமல் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' எனனக் கேட்டுக் கொண்டுள்ளார்.