பிரதமர் ஆக வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் அரசியலில் ஈடுபடவில்லை என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி திடீரென கூறியுள்ளார். இரண்டு மாதங்களுக்கு முன்னர் பெங்களூரில் ராகுல் காந்தி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 2019 தேர்தலில் வெற்றி பெற்று பிரதமர் பதவி ஏற்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த ராகுல் காந்தி, தனது கட்சி வெற்றி பெற்றால் நிச்சயம் தான் பிரதமர் பதவியை ஏற்பேன் என்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் லண்டன் சென்றுள்ள ராகுல் அங்கு செய்தியாளர்களுடன் கலந்துரையாடினார். 

அப்போது பிரதமர் பதவி குறித்து ராகுலிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ராகுல், பிரதமர் ஆக வேண்டும் என்கிற எண்ணத்தில் தான் அரசியலில் ஈடுபடவில்லை என்றார். இந்தியாவில் காங்கிரஸ் கொள்கைகளை தீவிரமாக அமல்படுத்த வேண்டும் என்பதற்கான போரில் தான் ஈடுபட்டுள்ளதாகவும் ராகுல் தெரிவித்துள்ளார். இந்தியாவின் அடுத்த பிரதமர் ராகுல் தான் என்று காங்கிரஸ் தொண்டர்கள் கனவு கண்டு வருகின்றனர். இந்த நிலையில் ராகுல் காந்தியோ தான் பிரதமர் பதவிக்கு ஆசைப்படவில்லை என்று கூறியுள்ளார். 

மேலும் 2019 தேர்தலுக்கு பின்னரே பிரதமர் குறித்த முடிவு எடுக்கப்படும் என்றும் ராகுல் தெரிவித்துள்ளார். 2 மாதங்களுக்கு முன்னர் பிரதமராக பதவி ஏற்பேன் என்று கூறிய ராகுல் திடீரென பல்டி அடித்ததற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. அதில் முக்கியமான காரணம், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்க காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மறுத்துவிட்டன. மேலும் புதிதாக கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ் போன்ற கட்சிகளும் பிரதமர் வேட்பாளராக ராகுலை முன்னிறுத்துவதை விரும்பவில்லை. 

ஏனென்றால் ராகுல் காந்தி அக்கட்சியின் துணைத்தலைவரானதற்கு பின்னர் மற்றும் தலைவரானதற்கு பின்னர் நடைபெற்ற எந்த தேர்தலிலும் காங்கிரஸ் வெற்றி பெறவில்லை. பஞ்சாப்பில் கிடைத்த வெற்றி கூட கேப்டன் அம்ரீந்தர் சிங் பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றியாகவே கருதப்படுகிறது. இதனால் கூட்டணியை உறுதிப்படுத்தவும், பா.ஜ.கவிற்கு எதிரான வலுவான கூட்டணியை உருவாக்கவும் தன்னை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவது சரியாக இருக்காது என்பதால் ராகுல் திடீரென இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டதாக கூறப்படுகிறது.