விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வேலூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “மத்தியில் ஆளும் பாஜக அரசு தன்னுடைய பெரும்பான்மையை வைத்து விவசாயிகளுக்கு எதிராக மூன்று சட்டங்களை இயற்றியுள்ளது. இந்த மூன்று சட்டங்களும் விவசாயிகளுக்கு எதிரானது. எனவே மூன்று சட்டங்களையும் திரும்ப பெற வேண்டும். இந்தியா முழுவதும் விவசாயிகள் குழந்தைகளுடன் குடும்பம் குடும்பமாகப் பனியிலும் வெயிலிலும் போராடிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், மோடி அரசு தன்னுடைய பிடிவாதத்திலிருருந்து இன்னும் பின்வாங்கவில்லை.


வருகிற 14ம் தேதி பாஜக அலுவலகங்களின் முன்பு முற்றுகைப் போராட்டம் நடத்துதாக விவசாயிகள் அறிவித்துள்ளனர். அதற்கு எங்களுடைய ஆதரவை தெரிவிப்போம். நரேந்திர மோடி அரசு ஒருபுறம் சனாதனத்தை நிலைநாட்டவும் கார்ப்பரேட்டுகளுக்கு சேவைகளை செய்யும் வகையிலும் செயல்படுகிறது. மொத்தத்தில் மோடி அரசு மக்கள் விரோத அரசாகவே உள்ளது. பெரும்பான்மை இந்து மக்களின் கட்சி எனச் சொல்லிக்கொள்ளும் மோடி அரசு, விவசாயிகளுக்கு துரோகம் விளைவிப்பதை, இந்து சமூகத்தை சார்ந்த மக்கள் இன்றாவது உணர வேண்டும். மோடி அரசு ஒரு இந்து விரோத அரசு மட்டுமல்ல, விவசாய விரோத அரசுகூட. 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்தச் சட்டத்தால் தமிழக விவசாயிகளுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்கிறார். இது கூட்டணிக்காக பேசுகிற பேச்சு. ஒட்டுமொத்த இந்திய விவசாயிகளையும் பாதிக்கும் சட்டம்தான் இச்சட்டம். மோடி அரசு திட்டமிட்டு 60 லட்சம் மாணவர்களின் படிப்புக்கான உதவித்தொகையை நிறுத்தியுள்ளது. இது அனைத்து சமூகத்தைச் சேர்ந்த மாணவர்களையும் பாதிக்கும். ஆனால், தமிழக அரசு இதையெல்லாம் பொருட்படுத்தவில்லை.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விவாதம் நடத்த அழைப்பு விடுத்த ஆ.ராசாவுக்கு பதில் சொல்கிற வகையில், முதல்வர் சொன்ன கருத்து அதிர்ச்சி அளிக்கிறது. மிகவும் பொறுப்புமிக்க பதவியில் இருக்கக்கூடிய முதல்வர் ஆ.ராசாவை பார்த்து என்னோடு விவாதிக்க அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை என்கிறார். அவர் என்ன பெரிய ஆளா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் அப்படிச் சொன்னதற்கு என்ன பொருள் என்று எனக்கு விளங்கவில்லை. இது அவருடைய தகுதியைக் கேள்விக்குறியாக்கியுள்ளது. இது கண்டனத்துக்குரியது” என திருமாவளவன் தெரிவித்தார்.