புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கிரண்பேடி டெல்லி மாநில அரசியலுக்கு திரும்புகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


புதுச்சேரி துணை நிலை ஆளுநராக கிரண்பேடி பொறுப்பேற்று இன்றோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதையொட்டி அவர் புதுச்சேரி மக்களுக்கு எழுதிய கடிதம், பரபரப்பை ஏற்படுத்தியது. 
“ என் மூன்றாண்டு காலத்தை, கவர்னராக நிறைவு செய்கிறேன். என் பணியின் நினைவுகளை விட்டுச் செல்லும் காலம் வந்து விட்டது. ஒவ்வொரு நாளும், கவர்னர் மாளிகையின் மேல், தேசிய கொடியை ஏற்றும்போது, எழுப்பப்படும் ஊதுகுழலின் ஒலியுடன் என் வேலை தொடங்கும். இது, என் பதவியின் நோக்கத்தை நினைவுபடுத்துகிறது. பிரதமர் மோடி என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கும், முதல்வர் நாராயணசாமிக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று தெரிவித்திருந்தார்.


இதில், “என் பணியின் நினைவுகளை விட்டுச் செல்லும் காலம் வந்துவிட்டது” என்று கிரண்பேடி கூறியிருப்பதன்மூலம் புதுச்சேரியிலிருந்து அவர் செல்வது உறுதியாகிவிட்டதாக தெரிகிறது. அதற்கேற்ப புதுச்சேரி புதிய துணை நிலை ஆளுநராக கர்நாடகவைச் சேர்ந்த மருத்துவர் ஒருவர் நியமிக்கப்பட இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இதன் பிறகு கிரண்பேடியின் பணி என்ன என்ற கேள்வியும் எழுந்துள்ளது. 
 கிரண்பேடி டெல்லி மாநில அரசியலுக்கு கிரண்பேடி திரும்புவார் என்று கூறப்படுகிறது. லோக்பால் அமைப்பை நிறுவ கோரி அன்னா ஹசாரே, அர்விந்த் கெஜ்ரிவால் ஆகியோருடன் சேர்ந்து போராட்டம் நடத்தியவர் கிரண்பேடி. 2015-ம் ஆண்டு டெல்லியில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் அர்விந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக கிரண்பேடியை பாஜக முதல்வர் வேட்பாளராக பாஜக தலைமை அறிவித்தது. ஆனால், பாஜக படுதோல்வி அடைந்தது. அதன்பிறகே கிரண்பேடி புதுச்சேரிக்கு அனுப்பப்பட்டார்.


தற்போது நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. அடுத்த ஆண்டு டெல்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப பாஜக உத்திகளை மேற்கொண்டுள்ளது. அதற்கேற்ப கிரண்பேடியை மீண்டும் டெல்லி மாநில அரசுக்கு கொண்டு வர, பாஜக தலைமை திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது. அதன் காரணமாகவே புதுச்சேரி துணை நிலை ஆளுநர் பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.