டெங்கு காய்ச்சலை கண்டறியும் சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை திட்டமிட்டு அரசு அதிகாரிகள் மிரட்டி வருவதாகவும்,  காய்ச்சல் எண்ணிக்கையை குறைத்து காண்பிக்கும் நோக்கில் அவர்கள் இப்படி நடந்துகொள்வதால் காய்ச்சல் ஏற்பட்டுள்ளவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்றும் சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கள் குற்றஞ்சாட்டியுள்ளது. இது தொடர்பாக  இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர்கள். 

தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் வேகமாகப் பரவி வருகிறது. தமிழக அரசின் புள்ளி விபரப்படி சுமார் நான்காயிரம் பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஏராளமான நோயாளிகள்  காய்ச்சலால் அவதிப்பட்டு வருகிறார்கள்.அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட காய்ச்சல்களுக்கான பரிசோதனைகள் செய்யப்படுகின்றனவா? என்பது கேள்விக் குறியாக உள்ளது.அனைவருக்கும் டெங்கு பரிசோதனையை, அரசு மருத்துவமனைகளில்  செய்யும் வசதிகள் இல்லை. இந்நிலையில் ,மக்கள்  தனியார்  மருத்துவமனைகள் மற்றும்  ரத்தப்பரிசோதனை நிலையங்களை நாட வேண்டிய நிலையில் உள்ளனர். 

இந்நிலையில், தனியார் பரிசோதனை நிலையங்கள் ,டெங்குக் காய்ச்சல் பரிசோதனைகளை செய்யக் கூடாது என அரசு அதிகாரிகள் மிரட்டி வருகிறார்கள்.டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்ட வேண்டும் என்ற நோக்கத்துடன், அரசு அதிகாரிகள் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கின்றனர். மேலும் , இரத்த பரிசோதனை நிலையங்கள்,  மருத்துவர் பரிந்துரைக்கிற டெஸ்டைத்தான் செய்கின்றன. எனவே, தமிழக அரசு , சிகிச்சை முறைக்கான புதியப்  புரோட்டக்காலை (Treatment Protocol) உருவாக்க வேண்டும்.

அதை அனைத்து மருத்துவர்களுக்கும், மருத்துவப் பரிசோதனை மையங்களுக்கும் தெரிவிக்க வேண்டும். அதை விடுத்து சிறிய ரத்தப் பரிசோதனை நிலையங்களை மூடச் சொல்லி மிரட்டுவது சரியல்ல. இரண்டு தினங்களுக்கு முன்பாக, கும்பகோணத்தில் ஒரு தனியார் ரத்த பரிசோதனை நிலையம்   டெங்கு பரிசோதனையை, Rapid card முறை மூலம் செய்ததற்காக , அந்நிலையத்திற்கு ரூபாய் 10 ஆயிரம் அபராதம் விதித்துள்ளனர். மேலும்,  ரேப்பிட் கார்டு முறை  பரிசோதனை தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறி, அப்பரிசோனை நிலையத்தையே அரசு அதிகாரிகள் மூடும் படி மிரட்டியுள்ளனர். இது கடும் கண்டனத்திற்குரியது.

உண்மை என்னவென்றால், இப்பரிசோதனை, தடை செய்யப்பட்டதற்கான எந்த அரசாணையும் வெளியிடப்படவில்லை.அதற்கான சுற்றறிக்கை மாவட்ட நிர்வாகம் மூலமாக  பரிசோதனைக் கூடங்களுக்கு அனுப்பப்படவும் இல்லை. மேலும், 2017 ஆம் ஆண்டில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்ட தகவலில், கார்டு  பரிசோதனை முறை தடை  செய்யப்பட வில்லை என அரசு கூறியுள்ளது. எனவே இது போன்ற நடவடிக்கைகளை கைவிட்டு டெங்குவை கட்டுப் படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.