Doctors across the country today strike
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வகை செய்யும் மத்திய அரசின் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டாக்கடர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசு இந்திய மருத்துவ கவுன்சில் அமைப்பை கலைத்துவிட்டு தேசிய மருத்துவ ஆணையம் என்ற புதிய அமைப்பை உருவாக்க வகை செய்யும் மசோதாவை பாராளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்திருக்கிறது.
இந்த மசோதா, நவீனமுறை சிகிச்சைகளை 6 மாத பயிற்சி வகுப்புக்கு பிறகு அனைத்து வழிமுறை மருத்துவர்களும் செய்ய வழிவகுக்கிறது. மேலும் ஆணையத்தில் பிற துறைகளைச் சேர்ந்தவர்கள், அரசியல்வாதிகள் மற்றும் ஆட்சி துறை நிர்வாகிகள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவதை ஊக்கப்படுத்துகிறது

மருத்துவ கல்வி தொடர்பான பணிகளில் முறைகேடுகள் நடைபெறுவதை தடுக்கும் நோக்கத்தில், இந்த புதிய ஆணையத்தை மத்திய அரசு அமைக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆணையத்தின் தலைவரை மத்திய அரசு நியமிக்கும். உறுப்பினர்களை மத்திய அமைச்சரவை செயலாளர் தலைமையிலான தேர்வுக்குழு தேர்வு செய்யும்.
தேசிய மருத்துவ ஆணையம் அமைக்க வகை செய்யும் இந்த மசோதாவை மத்திய சுகாதார துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கடந்த கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்ற மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதா இன்று விவாதத்துக்கு வருகிறது.
ஆனால் தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு இந்திய மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. இந்த ஆணையம் மக்கள் நலனுக்கு எதிரானது என்றும், மருத்துவ, சுகாதார பணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதாக அமையும் என்றும் டாக்டர்கள் கூறுகின்றனர்.
மத்திய அரசின் இந்த முடிவை எதிர்த்து இந்தியா முழுவதும் இன்று டாக்டர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காலை 6 மணி முதல் மாலை 6 மணிவரை தங்களுடைய தினசரி பணியை டாக்டர்கள் புறக்கணித்துள்ளனர். அரசு மருத்துவர்கள் மட்டுமல்லாமல் தனியார் மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்களும் இன்று தங்களது பணியை புறக்கணித்துள்ளனர்.
பெரும்பாலான அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் பணிக்கு வராததால் நோயாளிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர்.
