மத்திய அரசு கொண்டுவந்துள்ள , மருத்துவ நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் புதிய  சட்ட திருத்தம்,  ஏழை எளிய கிராமபுற மக்களுக்கு சிகிச்சை வழங்கி வரும் சிறிய வகை மருத்துவமனைகள் மற்றும் சிறிய ரத்த பரிசோதனை நிலையங்களுக்கு மூடுவிழா நடத்தும் சதி திட்டம் என சமூக சமத்துவத்திற்கான மருத்துவர்கள் சங்கம் மற்றும்   பாராமெடிக்கல் கல்வி மற்றும் நலச்சங்கம் குற்றஞ்சாட்டியுள்ளன.  கார்பரேட் நிறுவனங்களை ஊக்கப்படுத்த  மத்திய மாநில அரசுகள் இச்சட்டத்தையும், விதிமுறைகளையும்  ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தி ,சிறிய மருத்துவ நிறுவனங்களையும், மருத்துவமனைகளையும் ஒழித்துக் கட்ட முயல்கிறது , கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு சாதகமாக , இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது என புகார் தெரிவிக்கின்றனர்.  இது குறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் ரவீந்திர நாத். 

 

தற்பொழுது மத்திய அரசு, மருத்துவ நிறுவன ஒழுங்கு முறை சட்டத்தில் சில திருத்தங்கள் செய்து அதை  கெஜட்டில் வெளியிட்டுள்ளது. இந்த விதி முறை திருத்தங்களின் படி, சாதாரண சிறிய இரத்தப் பரிசோதனை நிலையங்களில் செய்யப்படும், அடிப்படை பரிசோதனைகளுக்கான முடிவுகளில் கூட இனி லேப் டெக்னீசியன்கள் கையெழுத்திட முடியாது. எம்பிபிஎஸ் படித்து ,ஓராண்டு  சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்கள் அல்லது நோய்குறியியல் ,மருத்துவ நுண்ணுயிரியியல், மருத்துவ உயிர் வேதியியலில் முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்து ,3 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்தான் கையெழுத்திட முடியும்.  இந்தியா முழுவதும் பல்லாயிரக்கணக்கான இரத்தப் பரிசோதனை நிலையங்கள் கிராமப்புறங்களில்  உள்ளன. 

அத்தகைய இடங்களில், எம்பிபிஎஸ் படித்து ஓராண்டு சிறப்பு பயிற்சி பெற்ற மருத்துவர்கள் கிடைப்பது சாத்திய மில்லை.அதைப் போலவே, நோய் குறியியல் , மருத்துவ நுண்ணுயிரியியல், மருத்துவ உயிர் வேதியியலில் முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்து ,3 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர்கள் கிடைப்பதும் கடினம். எனவே, அவை மூடப்படும் அபாயம் எழுந்துள்ளது. அதனால் லட்சக் கணக்கானோர் வேலை வாய்ப்பையும்,
வாழ்வாதாரத்தையும் இழப்பர். குறைவான கட்டணத்தில் இயங்கும் , இந்த அருகமை  இரத்தப் பரிசோதனை நிலையங்களை நம்பியுள்ள ,
கோடிக்கணக்கான கிராமப்புற நீரிழிவு நோயாளிகளும், இதர நோயாளிகளும் பாதிக்கப்படுவர். இது ,கிராமப்புற மக்களின் நலன்களுக்கு எதிரானது. 

மத்திய அரசு , நாடு முழுவதும் ,அரசுக்கு சொந்தமாக உள்ள 1.5 லட்சம் துணைச் சுகாதார நிலையங்களை, சுகாதார மற்றும் நல மையங்களாக (Health and Wellness Centres) ,பெயர் மாற்றி ,கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வழங்க உள்ளது. மொத்தத்தில் கிராமப்புற சிறிய இரத்தப் பரிசோதனை நிலையங்களை ஒழித்துக் கட்ட மத்திய அரசு இந்த புதிய விதி முறை திருத்தங்களை கொண்டு வந்துள்ளது. எனவே,ஏழை எளிய மக்களுக்கு எதிரான , கார்ப்பரேட நிறுவனங்களுக்கு சாதகமான ,இந்த விதிமுறைகளை  மத்திய அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும். என வலியுறுத்தினார், அப்போது சமூக சமத்துவத்திற்கான டாக்டர் சங்கத்தின் செயலாளர் டாக்டர் ஏ.ஆர்.சாந்தி உடன் இருந்தார்.