தற்போதெல்லாம் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்படும் நபர்கள் இரண்டு நாட்கள் கூவிவிட்டு பிறகு சைலண்ட் ஆகிவிடுவார்கள் அல்லது தினகரன் அணிக்கு தாவிவிடுவார்கள். இதைத்தான் எடப்பாடியும், பன்னீரும் எதிர்பார்த்து எந்த நடவடிக்கையையும் தில்லாக எடுக்கிறார்கள்.

ஆனால் கடந்த சில நாட்களுக்கு முன் நீக்கப்பட்ட மாஜி எம்.பி.யான கே.சி.பழனிசாமியோ அல்வாவுக்கே அல்வா கொடுக்கும் திறமைசாலியாக இருக்கிறார் என்று அக்கட்சியினரே ஆச்சரியப்படுகிறார்கள். 
மிக நுணுக்கமாக ஒவ்வொரு பிரச்னையாக, ஒவ்வொரு அமைச்சரின் சறுக்கலாக வெளியே கொண்டு வந்து அவர் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இவரை ஏன் கட்சியைவிட்டு நீக்கவில்லை? என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு தலைமைக்கு கடிதம் எழுதுகிறாராம்.  

சொத்துக் குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு தீர்ப்பு ஜெயலலிதா அண்ட்கோவுக்கு பாதகமாக வந்தது. இந்நிலையில் சசிகலாவை கட்சியிலிருந்து விலக்கி வைத்திருந்தார்கள்.

இந்நிலையில் சசிக்கு ஆதரவாக ‘உங்களையெல்லாம் அமைச்சராக்கிய சின்னம்மாவுக்கு நீங்கள் காட்டும் நன்றி இதுதானா?’ என்று சிலர் நியாயம் கேட்க, ‘தீர்ப்பில் தண்டனை உறுதியாகியிருக்கிறது. அம்மாவே இப்போது உயிரோடு இருந்திருந்தாலும் அவர் மீதும் இப்படித்தான் நடவடிக்கை எடுத்திருப்போம்.’ என்று அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சொல்லியிருந்தார். 

இதை மேற்கோள் காட்டியிருக்கும் கே.சி.பழனிசாமி, அம்மாவையே அவதூறாக பேசியவர் மேல் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? என்று கேட்டுள்ளார். 

அதேபோல் சமீபத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ஒரு பெண் பத்திரிக்கையாளரிடம் ‘நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க!’ என்று பேசி கடும் சர்ச்சையில் சிக்கினார். இந்த விவகாரத்தையும் குறிப்பிட்டுள்ள கே.சி.பழனிசாமி ’ ஆணாதிக்க அரசியலில் எதிர்நீச்சல் போட்டு வென்று பல சாதனைகளை குவித்தவர் அம்மா.

அவரது அமைச்சரவையை சேர்ந்த ஒருவர் இப்படி, ஒரு பெண்ணை பொதுவெளியில் தவறாக பேசியிருக்கிறார். இவர் மீது என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்? இப்படி பேசும் தைரியம் இவருக்கு எங்கிருந்து வந்தது?’ என்றும் தலைமையை நோக்கி கேள்விக் கணைகளை வீசியிருக்கிறாராம். 
பதில் சொல்ல வேண்டிய தலைமை என்ன செய்ய போகிறதோ?!