ஜெயலலிதா இல்லாத அ.தி.மு.க.வின் ஆட்சியின் மாண்பினை ’பங்கம்’ செய்த விவகாரங்களில் ஒன்று, அணை நீரில் தெர்மகோல் மிதக்க விட்ட சம்பவம். தேசிய அளவில் மட்டுமல்ல, சர்வதேச அளவில் அரசியல்வாதிகளும், அறிவியல் வல்லுநர்களும் தமிழகத்தை நோக்கி விநோதமாக திரும்பிப் பார்க்க வைத்திட்ட விவகாரம் இது. 

அதாவது மதுரை மாவட்டம் வைகை அணையில், சூரிய வெப்பத்தால் நீர் ஆவியாவதால் ஏற்படும் நீரிழப்பை தடுக்க, அம்மாவட்டத்தை சேர்ந்த எம்.எல்.ஏ.வும், அமைச்சருமான செல்லூர் ராஜூ, கலெக்டர் புடை சூழ அணைக்கு சென்று, வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு நீரில் இறங்கி சில தெர்மகோல் அட்டைகளை மிதக்க விட்டார். அவர் கரையேறுவதற்குள் அந்த அட்டைகள் கரையேறி, அதையும் தாண்டி காற்றில் பறக்க துவங்கின. ஆனால் இதைப்பற்றி கவலையேபடாமல் மீடியாவுக்கு அசால்ட் பேட்டி கொடுத்த செல்லூரார் ‘நீர் ஆவியாகி வீணாவதை தடுக்கும் மிக சிறந்த யோசனை செயல்படுத்தப்பட்டுள்ளது.’என்றார். 
இந்த சம்பவம்  தேசம் தாண்டி வைரலானது. ‘கடல் போன்று இருக்கும் வைகை அணை நீரின், ஒரு ஓரத்தில் நான்கு துளிகள் தண்ணீரை மறைக்குமளவுக்கு தெர்மகோலை மிதக்கவிட்டுட்டா நீர் ஆவியாவது  தடுக்கப்பட்டுவிடுமா? ஒரு அமைச்சர் செய்யும் வேலையா இது?’ என்று ஆயிரம் விமர்சனங்கள் கிளம்பின

ஆனால் எதற்கும் அசரவில்லை செல்லூரார். சமீபத்தில் கூட ஒரு பேட்டியில் ‘அந்த தெர்மகோல் திட்டத்தை தேசம் தாண்டியும் வல்லுநர்கள் பாராட்டுறாங்க.’ என்று அசராமல் சிக்ஸரடித்தார். 
இது இப்படியிருக்க, அன்று செல்லூரார் வைகை அணையில் நடத்திய அந்த தெர்மகோல் மிதக்க விடும் செயல் பற்றி, திருநெல்வேலியை சேர்ந்த வழக்கறிஞர் பிரம்மா, மதுரை கலெக்டர் அலுவலகத்துக்கு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் சில கேள்விகளை கேட்டிருந்தார். மிக நீண்ட இழுத்தடிப்புக்குப் பின், இரண்டரை ஆண்டுகள் கழித்து அதற்கு தற்போது பொதுப்பணித்துறை சில பதில்களை அனுப்பியுள்ளது. 
அதில்....
            *  இந்த திட்டத்திற்கு பணம் எதுவும் செலவழிக்கவில்லை.
            *  இந்த திட்டத்திற்காக டெண்டர் எதுவும் விடப்படவில்லை.
            *  இதுஇல் உயிரிகள் எதுவும் இறக்கவில்லை.............என்று ‘இல்லை! இல்லை! இல்லை!’ என்றே பதில் அனுப்பியுள்ளனராம். ஆனால் வைகை அணையின் நீர்மட்டம், வெயில் காரணமாக தினமும் ஒரு மில்லியன் கன அடிக்கு ஆவியாகிறது! என்று சொல்லியுள்ளனர். இந்த பதில்கள் குறித்துப் பேசும் வழக்கறிஞர் பிரம்மா “அரசும், அதிகாரிகளும் எத்தனை இழுத்தடிப்பு செய்கிறார்கள் என்பதற்கு உதாரணம்தான் இந்த சம்பவம். இதை நான் விடப்போவதில்லை, அடுத்த கேள்விப்பட்டியல் தயார்.” என்றிருக்கிறார். 

ரிட்டயர்டு உயரதிகாரிகளோ ‘இந்த திட்டத்துக்காக பணம் எதுவும் செலவு செய்யவில்லை! என்று அதிகாரிகள் சொல்லியிருந்தால், அது முழு பொய். அதுவும் அரசு அதிகாரப்பூர்வமாக சொல்லியிருக்கும் பொய். அன்று வைகை அணைக்காக அமைச்சரின் காருடன் கலெக்டர் உள்ளிட்ட எவ்வளவு கார்கள் சென்றன்! என்பது உலகத்துக்கே தெரியும். இப்போதும் யூடியூபை தட்டினால் நொடிகளில் அந்த காட்சி கண் முன் விரியும். காருக்கான பெட்ரோல், டீசல் செலவி துவங்கி, தேய்மான செலவு, அன்று வைகை அணைக்கு செல்கையில் மற்றும் திரும்புகையில் செய்யப்பட்ட சிற்றுண்டி செலவு, மீடியாவை கலெக்டர் அலுவலகம் சார்பாக அழைத்துச் சென்ற வாகன செலவு என்று எவ்வளவோ நடந்திருக்கிறது. அதற்கான பணத்தை அமைச்சர் என்ன தன் சொந்த பணத்திலிருந்து கொடுத்தாரா அல்லது யாராவது அதிகாரிகள் கொடுத்தனரா?
ஆக அன்று மிதக்கவிட்டு, பறக்கடிக்கப்பட்ட தெர்மகோலின் பின்னே பல ஆயிரக்கணக்கான மக்கள் பணம் செலவாகியுள்ளது. இதை மறைத்து பொய் தகவல்கள் தந்ததன் மூலம் அரசின் மானத்தை மீண்டும் கப்பலேற்றியுள்ளனர் அதிகாரிகள். இதையெல்லாம் அனுமதிக்காமல் இன்னும் குடைந்தெடுக்க வேண்டும்.” என்கிறார்கள்.